தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெங்களூரில் மேலும் ஆயிரம் அதிரடிப்படை குவிப்பு!

201609140820239429_cauvery-row-bengaluru-crawls-back-to-normalcy_secvpfகர்நாடக மாநிலத்தில் மேலும் 1,000 அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பெங்களூருவில் இயல்பு நிலை திரும்புகிறது.

பெங்களூருவில் நேற்றும் கன்னட அமைப்பினர் ஒரு சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் சில வாகனங்களுக்கும் தீ வைத்தார்கள். மாட்டூர்-மாலவள்ளி-கொள்ளேகால் சாலையை மறித்து, பாரதி கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். சஞ்சய் சர்க்கிளில் கன்னட அமைப்பினர் தமிழ் நாளேடுகளை கொளுத்தினர்.

இந்த நிலையில், காவிரி பிரச்சினையில் பெங்களூருவில் தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுவதால் இன்றும் (புதன்கிழமை) 144 தடை உத்தரவும், 16 போலீஸ் நிலைய பகுதிகளில் பிறப்பிக்கப் பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள 16 போலீஸ் நிலைய பகுதிகளில் மத்திய ஆயுதப்படை போலீசார், கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று அறிவிக்கப்படாத முழு அடைப்பு போன்ற சூழ்நிலை நிலவியது. அரசு நகர பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் சாலைகளில் தென்பட்டன. மெட்ரோ ரெயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. பஸ் நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய கடைகள் வரையில் அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. திரையரங்குகள் மூடப்பட்டன. சாலைகளில் ஒரு சில இரு சக்கர வாகனங்கள் ஓடின. ஆம்புலன்சு வாகனங்கள் எந்த இடையூறும் இன்றி இயங்கின. மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்பட்டன. பல பகுதிகளில் பால் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.

நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.

தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை.

துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு இருந்தாலும் ஹெக்கனஹள்ளியில் ஒரு வாகனத்தை மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தினர். அங்கு கூட்டமாக கூடியிருந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். அதே போல் மாகடி ரோட்டில் ஒரு ஓட்டலுக்கு தீவைக்கப்பட்டது. சித்ரதுர்காவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சரக்கு லாரியை போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தினர்.

இதேபோன்று நேற்று முன்தினம் பாதி எரித்து விடப்பட்ட பஸ் நேற்று மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. கொளுத்தப்பட்ட வாகனங்கள், தமிழ்நாடு பதிவு எண் கொண்டவை.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் முதல்-மந்திரி சித்தராமையா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து, கலவரம் மேலும் பரவாமல் தடுக்கும் விதத்திலும், பதற்ற நிலைமையை கருத்தில் கொண்டும், மேலும் 10 கம்பெனி அதிரடிப்படையினர் (சுமார் 1,000 பேர்) பெங்களூரு விரைந்தனர்.

இன்று(புதன்கிழமை) பஸ் உள்பட அனைத்து வகையான போக்குவரத்து சேவையும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 16 போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் அமைந்துள்ள பகுதிகள் உள்பட பெங்களூரு நகரில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...