Designed by Iniyas LTD
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , ராமதாஸ் கண்டனம்
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர்கள் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: நிதிப் பற்றாக்குறையால் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் மத்திய அரசு, திட்டச் செலவுகளைக் குறைத்து மக்கள் நலத் திட்டங்களை முடக்கி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதம் வரை, அதாவது 53 டாலராக குறைந்துள்ளது.
அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உற்பத்தி வரியை அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு ரூ.2 உற்பத்தி வரி வியாழக்கிழமை (ஜன.1) உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசுக்கு ரூ.6,000 கோடி வருவாய் கிடைக்கும். மக்களின் சுமையைக் குறைக்காமல் வரியை உயர்த்துவது கண்டனத்துக்குரியது.
ராமதாஸ்: பெட்ரோல், டீசல் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவற்றின் மீதான கலால் வரியை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, விலை உயரும்போதெல்லாம் இங்கும் விலையை உயர்த்தியது. ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ப விலையைக் குறைக்காமல் கலால் வரியை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சர்வதேச சந்தை நிலவரப்படி தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 38 ஆகவும், டீசல் விலை ரூ. 30 ஆகவும் குறைத்திருக்க வேண்டும். ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது. மக்களை பணம் காய்க்கும் மரமாகக் கருதி அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயல்வது சரியல்ல. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.