தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும் நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகப் புத்தர்சிலை அவசர அவசரமாக திறந்துவைப்பு….

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கபட்டு வந்த புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று (23) அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14 ஆம் திகதி அன்று அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது.

இந்நிலையில் இந்த முறுகல் நிலை தொடர்பாக  அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்தவகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இருதரப்பினருக்கும் முல்லைத்தீவு மாவட்ட  நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

எனினும் குறித்த புத்தர் சிலையினை விரைவில் திறக்க பௌத்த மதகுரு முற்படுவதை உணர்ந்து  அவசர நிலைமையாக கருதி  ஆலய நிர்வாகத்தினர் மற்றும்,

தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் மூலம் அது தொடர்பன வழக்கு 22.01.2019 நேற்றைய நாளுக்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்றைய வழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராமமக்களின் சார்பில் ஆஜரானவர்களினால் வெளிப்படுத்தப்பட்டது.

அத்தோடு கடந்த பொங்கல் வழிபாட்டின் போது குறித்த பிக்குவால் வழிபாடுகளுக்கு சென்ற தமிழ்மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தபட்டிருந்தமையும் புகைப்படங்கள் ஆதார்ம்மூலம் காண்பிக்கபட்டது.

இதனடிப்படையில் நாளையதினம் (24) இருதரப்பினரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்று கட்டளை பிறப்பித்திருந்தது .

இந்த நிலையில்  இன்றையதினம்  பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் பூரண  ஆதரவுடன் பெரததெனியா பல்கலைகழக பேராசிரியர் கலாநிதி  கபில குணவர்த்தன மற்றும் புல்மோட்டை அரிசிமலை பகுதியில் விகாரை அமைத்து தங்கியுள்ள பிக்குககளின் பங்குபற்றலுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது .

நாளையதினம் மாவட்ட நீதிமன்றில் இந்த சர்சைக்குரிய விகாரை தொடர்பான் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளபடவிருந்த நிலையில்  அவசர அவசரமாக இந்த சிலை திறந்துவைக்கபட்டுள்ளது .

இதேவேளை தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த முன்னாள் வடமாகாணசபை  உறுப்பினர் து.ரவிகரன்,மற்றும் கிராம மக்களுடன்   அங்கிருந்த பௌத்த துறவிகள் மற்றும் தென்னிலங்கையைில் இருந்து வருகை தந்தவர்கள் சிலரும்,

அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதோடு,  அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களுடன் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர் .

மேலும் அங்கு செய்தி சேகரிப்பிற்குச்சென்ற ஊடகவியலாளர்கள் தென்னிலங்கையில் இருந்து வருகைதந்தவர்களாலும், பௌத்த துறவிகள் சிலராலும் பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களாலும்  புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

அதோடு ஊடகவியலாளர்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் அனைத்து ஊடகவியலாளர்களும் அரசியல் ஊடகவியலாளர்கள் எனவும் விமர்சித்து கேலி பண்ணும் விதமாகவும் செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்புக்காக  வருகைதந்த பௌத்த பிக்குகள் அண்மையில் குமுளமுனை குருந்தூர் மலையில் விகாரை அமைப்பதற்க்காக சிலைகளுடன் சென்ற வேளை கிராம மக்கள் தடுத்ததால் முறுகல் நிலை ஏற்பட்டு பொலிசார் தலையிட்டு தீர்த்துவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .

அத்தோடு இந்த பௌத்த பிக்குகள் அண்மைக்காலமாக புல்மோட்டை பகுதியில் நிலைகொண்டு முசலம் மக்களுக்கு சொந்தமான காணிகளில்  பல சிங்கள குடியேற்றங்களையும் விகாரைகளையும் அமைத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது

இருப்பினும் குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர் அவர்களை சந்தித்த ஊடகவியலாளர்கள் இந்த விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோது,

அதனை முற்றுமுழுதாக மறுத்துள்ளதோடு தான் அனைத்து அனுமதிகளும் பெற்றே விகாரை அமைப்பதாகவும் தனக்கு இங்கு அடையாள அட்டை கூட பிரதேச செயலக அனுமதியுடனே பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்  .

பிரதேச செயலகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை என தெரிவிக்கும் பொது தான் அடையாள அட்டை கூட பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற்றே பெற்றேன் என்பது தற்போது மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

மக்களுக்கு ஒன்றைகூறும் அதிகாரிகள் செயலில்  வேறு ஒன்றையும் செய்கிறார்களா என்பது விரைவில் வெளிவரும்

Comments
Loading...