Designed by Iniyas LTD
பெல்ஜிய போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி விலகியுள்ளார்
பெல்ஜியம் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் தோல்வியடைந்ததாகப் பரவலாகப் புகாருக்குள்ளான அந்த நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜாக்குலின் கலான்ட் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
தலைநகரில் நடைபெற்ற பெல்ஜியம் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, இது குறித்த அறிவிப்பை பிரதமர் சார்லஸ் மைக்கேல் வெளியிட்டார்.செய்தியாளர்களிடம் அது குறித்து பிரதமர் கூறுகையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜாக்குலின் கலான்ட் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். அரசர் அவருடைய ராஜிநாமாவை ஏற்றார் என்று கூறினார்.முன்னதாக, பெல்ஜியம் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் பல முறை புகார் தெரிவித்திருந்தது. அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. பெல்ஜியம் அமைச்சரவை இது தொடர்பாக விவாதித்து, போக்குவரத்துத் துறை தொடர் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டே அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அதன் அடிப்படையில் முறைப்படி தொடர் நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்துத் துறை தவறியது. இதனிடையே, ஸாவன்டம் சர்வதேச விமான நிலையம், பிரஸ்ஸல்ஸ் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பெல்ஜியம் போக்குவரத்ததுத் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஐரோப்பிய யூனியன் ஏற்கெனவே வெளியிட்ட ஆய்வறிக்கை வெளிச்சத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், அமைச்சர் ஜாக்குலின் கலான்ட் ராஜிநாமா செய்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சரின் பதவி விலகல் தொடர்பாக பெல்ஜியம் அரசர் சார்பிலான செய்திக்குறிப்பு தனியாக வெளியிடப்பட்டது.ஐரோப்பிய யூனியனின் தலைமையகம் பிரஸ்ஸெல்ஸில் அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் தலைநகராகவே பிரஸ்ஸெல்ஸ் கருதப்படுவதால், அந்த நகரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது கடந்த மாதம் நிரூபணமாகியது.