Designed by Iniyas LTD
போர்க்குற்றச்சாட்டுகளால் தான் அமெரிக்க நுழைவிசைவு மறுக்கப்பட்டது – என்கிறார் சரத் பொன்சேகா
சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணப்படாததால் தான், ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு, தனக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதாக சிறிலங்காவின் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஏஎவ்பியிடம் இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,“ நான் இந்த வாரம் நியூயோர்க்கிற்கு பயணிக்கவிருந்தேன். ஆனால் சிறிலங்காவில் இருந்து செல்லும் குழுவில் இடம்பெற்றிருந்த எனக்கு மாத்திரம் நுழைவிசைவு வழங்கப்படவில்லை.
இதனால், ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபருடன், இணைந்து கொள்ள முடியவில்லை.
இராணுவத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளால் தான், எனக்கு நுழைவிசைவு வழங்கப்படவில்லை.
இதனால் தான், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
போரின் இறுதிக்கட்டத்தில் சிலரின் செயல்களால் ஒட்டுமொத்த சிறிலங்கா படைகளினதும் பெயர் நாசமாக்கப்படக் கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.