தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போர்க்குற்ற விசாரணை அறிக்கை தயாரிப்பு இன்னமும் முழுமை பெறவில்லையாம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை தயாரிப்பு இன்னமும் முழுமை பெறவில்லை என ஐநா மனித; உரிமைக் கவுன்சிலின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ம் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கம், மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், இந்த அறிக்கை இன்னமும் முழுமை பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

விசாரணை சாட்சியறிக்கைகள் அமர்வுகள் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக பூர்த்தியாக வேண்டுமென கோரப்பட்ட போதிலும் இதுவரையில் சாட்சியறிக்கைகள் பூரணமாககவில்லை. பாரியளவில் சாட்சியங்கள் கிடைக்கப்பெற்று உள்ளதனால் விசாரணை நடத்தி அவை அறிக்கையிடப்படவில்லை. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இறுதி விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணிகளும் இன்னமும் முழுமை பெறவில்லை தெரியவருகிறது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிங்கள மக்களினால் சாட்சியங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் இவற்றில் அநேகமானவை 2002ம் ஆண்டுக்கு முன்னரான சம்பவங்கள் தொடர்பானவையாகும். எனவே இந்த சாட்சி அறிக்கைகள் பயன்படுத்தப்படவில்லை. சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தல், சிங்கள மக்களை கொலை செய்தல், மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை ஆகியனவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.

அறிக்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசாங்க அல்லது தமிழீழ விடுதலைப் புலி தரப்புக்கள் பற்றி அறிவிக்கப்பட மாட்டாது எனவும், இந்த அறிக்கை வெறுமனே ஓர் விசாரணை அறிக்கையாகவே அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.War-Crimes-in-Sri-Lanka

தீர்மானத்தை மார்ச் மாத அமர்வுகளில் சமர்ப்பிக்க வேண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட தீர்மானத்தை முன்வைத்த நாடுகள் கோரினால், தீர்மானம் சமர்ப்பிக்கும் நடவடிக்கையை ஒத்தி வைக்க முடியும். அதிகளவு சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதனால் மேலதிக கால அவகாசத்தை கோரும் அதிகாரம் ஆணையாளருக்கு உண்டு. வழமையாக இவ்வாறான அறிக்கை தயாரிக்கப்பட்டதன் பின்னர் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு கருத்து கோரப்படும்.

எனினும், விசாரணை அறிக்கை பூர்த்தியாகாத காரணத்தினால் அறிக்கையை இலங்கைக்கு முன்கூட்டியே வழங்கக்கூடிய சாத்தியங்கள் கிடையாது. அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் அதற்கு பதிலளிக்க இரண்டு வார காலஅவகாசம் குறைந்தபட்சம் அவசியம் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பொறுப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படும் எனவும், இதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அனுமதி அவசியமாகின்றது. தற்போதைய நிலைமையின் கீழ் இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக் குறித்த அறிக்கை வெளியிடப்படக் கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

Comments
Loading...