Designed by Iniyas LTD
போலீஸ் வாகனம் மோதி இறந்த குடும்பங்களுக்கு தலா 1 லட்சம்!
போலீஸ் வாகனம் மோதியதில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, அயனாவரம், பனந்தோப்பு ரெயில்வே காலனி, 10-வது தெரு அருகே 5.6.16 அன்று காவல் துறையின் வாகனம் மோதியதில், அயனாவரத்தைச் சேர்ந்த விக்டர் என்பவரின் மகன் ராம்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலயே மரணமடைந்தார்.
ஓட்டேரியைச் சேர்ந்த டேவிட்டின் மகன் சாலமன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த ராம்குமார் மற்றும் சாலமன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அவர்களது குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.