Designed by Iniyas LTD
மகனை காணாமல் ஆக்கிய இராணுவம் கணவரை வாகனத்தால் அடித்து கொன்று விட்டது – கதறும் தாய்
கணவரை வாகனத்தால் அடித்துக் கொன்ற இராணுவம் மகனையும் பிடித்துச் சென்று காணாமல் ஆக்கிவிட்டது அரசாங்கத்தினால் தான் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மகனைக் காணாது தவிக்கும் தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று இரண்டாவது தடவையாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. அதன் போதே குறித்ததாய் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்காலில் இருக்கும் போது 2009.03.15 இல் எனது கணவர் ஷெலில் காயப்பட்டுவிட்டார் .நான் கணவரைக் கூட்டிக் கொண்டு புல்மோட்டை வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டேன். மகன் விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டிலேயே இருந்தார்.
புல்மோட்டை வைத்தியசாலையில் இருந்து காயம் சுகமாகி கணவரை கூட்டி வந்து புல்மோட்டை சம்பத் நுவர பாடசாலையில் தங்க வைக்கப்பட்டோம். பின்னர் நலன்புரி முகாம் வலையம் 4 இல் இராணுவம் கொண்டுவந்து விட்டனர்.
அதன்பின்னர் எனது கணவரின் நண்பர் ஒருவர் முகாமில் இருந்தார். அவர் மகனை வட்டுவாகலில் இராணுவகட்டுப்பாட்டிற்குள் கண்டதாக தெரிவித்தார். அதனையடுத்து நாங்கள்எல்லா இடமும் தேடிவிட்டோம். ஆனால் இன்றுவரை எதுவித தகவலும் இல்லை.
எனது கணவரையும் கல்குளம் சந்தியில் வைத்து இராணுவ வாகனம் அடித்து அந்த இடத்திலேயே உடல் சிதறி செத்திட்டார். சம்பவம் 2012.04.02 இல் நடைபெற்றது. மகன் காணாத கவலையில் இருந்த எனக்கு கணவரும் இறந்திட்டார் இப்போது தனியாக இருக்கின்றேன்.
மகனையும் இராணுவம்பிடித்துச் சென்று காணாமல் ஆக்கிவிட்டது. அதே இராணுவம் கணவனையும் வாகனத்தால் அடித்து கொன்று விட்டது. எங்கள் குடும்பத்திற்கு இராணுவத்தினால்தான்பாதிப்புஏற்பட்டுள்ளது. அதற்கான வழக்கு தற்போதும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு வழக்கு தவணைக்கும் நாங்கள் போனால் இராணுவம் வரமாட்டார்கள் . தவணை மட்டும் போடுவார்கள் . எத்தினை நாட்கள் இவ்வாறு அழைகின்றது. அரசாங்கத்தினால் தான் என்குடும்பத்திற்கு பாதிப்பு என அவர் மேலும் சாட்சியமளித்தார்.