Designed by Iniyas LTD
மதுரா கலவரத்தில் 24 பேர் படுகொலை! இன்று விசாரணை
மதுரா நகரில் குடியிருப்பு பகுதியை அகற்றியபோது ஏற்பட்ட கலவரத்தில் 24 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநில அரசு நியமித்துள்ள உயர்மட்ட குழுவின் நீதி விசாரணை இன்று தொடங்குகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை கோர்ட் உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது வன்முறை வெடித்தது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முழு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. தற்போது, மதுராவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதுரா கலவரம் குறித்து கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவரும், மாநில முன்னாள் முதல் மந்திரியுமான மாயாவதி, மதுரா கலவரம் குறித்து சி.பி.ஐ. அல்லது உச்சநீதிமன்றம் அமைக்கும் சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அலிகார் நகர கமிஷனர் தலைமையில் அதிகாரம் கொண்ட உயர்மட்ட குழுவின் நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு இன்று காலை விசாரணையை தொடங்கவுள்ளது.
இதுதொடர்பாக, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அலிகார் நகர கமிஷனரும், விசாரணை குழுவின் தலைவருமான சந்திரகாந்த், ‘முதலில் சம்பவம் நடந்த ஜவஹர் பாக் பகுதியை சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரிப்போம். நடந்த கலவரம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்துள்ள தனிநபர்கள் யாராக இருந்தாலும் அவற்றை எங்களிடம் சமர்ப்பிக்கலாம்’ என கூறியுள்ளார்.
இந்த விசாரணை மாஜிஸ்திரேட் மட்டத்திலான விசாரணையாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ’இந்த விசாரணை உயர்மட்ட அதிகாரம் படைத்த அரசு நிர்வாகத்தின் விசாரணையாக இருக்கும்’ என குறிப்பிட்டார்.