Designed by Iniyas LTD
மதுரையில் 7 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை?
மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் நாராயண சாமி. வேளாண்மைத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மேனகா (வயது62). நேற்று நாராயணசாமி உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டார். மேனகா மட்டும் இரவில் வீட்டில் தனியாக தூங்கினார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே புகுந்து கதவை தட்டியது. கணவர்தான் வந்திருப்பார் என நினைத்து மேனகா கதவை திறந்தார்.
உடனே திபுதிபுவென நுழைந்த கும்பல் மேனகாவை சரமாரியாக தாக்கியது. அவரை கட்டிப் போட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகையை எடுத்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் மேனகாவை தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த கும்பல் திருடிய நகையுடன் அங்கிருந்து தப்பியது.
இன்று காலை மேனகா பிணமாக கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கூடல்நகர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாயும் வர வழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது திட்டமிட்டு இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.