தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் – கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.   Christian-Institute

சென்னை-மயிலை உயர் மறை மாவட்டத்தின் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில், கத்தோலிக்க கல்வி குழுமங்கள், தென்னிந்திய திருச்சபையின் கல்வி நிறுவனங்கள், முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் சார்பில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தும், அதனை மறுபரிசீலனை செய்யக்கோரியும், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சென்னை பேராயம், தென்னிந்திய திருச்சபை ஆயர் ஜார்ஜ் ஸ்டீபன், தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி குழும செயலாளர் அருளப்பன், லயோலா கல்லூரி முதல்வர் சேவியர் ஆரோக்கிய சாமி, முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பின் செயலாளரும், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான சாதிக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்பதில்லை என்பதை எடுத்து காட்டவும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இது சலுகைகளை பெறுவதற்கான போராட்டம் அல்ல, எங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டம்.  புதிய கல்விக் கொள்கையில், கல்வி இந்து மயமாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவற்றின் உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. எங்களின் வருத்தத்தையும், ஆதங்கத்தையும் மத்திய அரசுக்கு எடுத்துக் காட்டவே இந்த போராட்டம்.

நாளை அல்லது செவ்வாய்க்கிழமை தமிழக கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து எங்களது விண்ணப்பங்களை தெரிவிக்க உள்ளோம். புதிய கல்விக் கொள்கையை கட்டாயமாக மறுபரிசீலனை செய்து மக்களுக்கும், மாணவர்களுக்கும் நல்ல பயன் அளிக்கும் வகையில் செய்ய வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...