Designed by Iniyas LTD
மத்திய அரசு சட்டம் இயற்றுவதன் மூலமே ஜல்லிக்கட்டை நடத்தமுடியும்: ஜி.கே.வாசன்
சட்டம் இயற்றுவதன் மூலமே ஜல்லிக்கட்டை நடத்தமுடியும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
மதுரையில் கட்சியினர் இல்ல விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடப்பாண்டிலாவது ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும் என்பதே அனைத்து கட்சியினரின் கோரிக்கையாகும். மத்திய பாஜக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதை கொள்கையாக அறிவித்து, அவசரச் சட்டம் இயற்றிடவேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் மக்களவையில் குரல் கொடுப்பது அவசியம். பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநில அரசு உத்திரவாதம் அளிக்கவேண்டும்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் கிராமப்புற, நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்புப் பணம் ஒழிப்பு என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்காக மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியாக கையாளவில்லை.
அரசு ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியத்தை அரசு ரொக்கமாக வழங்கவேண்டும். அரசு ஊழியர்கள் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவை சிரமமின்றி கையாள அரசு உதவிடவேண்டும்.
ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்கள் படகை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுப்பது அவசியம். அதற்காக வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
ரூபாய் நோட்டு விவகராத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் போராட்டத்துக்கு தமாகா ஆதரவளிக்கிறது என்று கூறினார்.