தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய அரசு மாணவர்களுக்கு துணையாக இருக்கும்- பொன். ராதாகிருஷ்ணன்

ponசென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் அமைப்புக்கு விதித்த தடையை அரசியல் ஆக்கக்கூடாது.  இதுகுறித்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பிரச்சனையை அரசியல் ஆக்கக்கூடாது. மாணவ சமுதாயம் அனைத்தையும் சிந்தித்து நடக்க வேண்டும். மத்திய அரசு எப்போதும், மாணவர்களுக்கு துணையாக இருக்கும்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறோம். விஜயகாந்த், ஜி.கே. மணி, அன்புமணி மற்றும் ஈஸ்வரன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் சதக்கத்துல்லாவுடன் இன்று மாலை பேச உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பின்பு, அறிவிக்கும் முடிவு இறுதி முடிவாக இருக்கும். மோடி அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அனைத்து மத்திய மந்திரிகளையும் அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தற்போது மத்திய மந்திரிகள் நாடு முழுவதும் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று வருவதால் தமிழகத்தில் எப்போது கூட்டம் நடக்கும் என்பதை பின்னர் அறிவிப்போம். வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி சேரும் என வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அ.தி.மு.க.வுடன் பேசியதால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றும், தி.மு.க.வுடன் பேசினால், தி.மு.க. கூட்டணி என்றும் கூறுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி நாகரிகமான அரசியலை நடத்துகிறது. நட்பு ரீதியில் பேசுவதை அரசியலாக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வள்ளியூரில் செயல்பட்டு வந்த தேசிய நெடுஞ்சாலை திட்ட செயலாக்க அலுவலகம் தற்போது நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி அருகே புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:–

சுசீந்திரம் பாலப்பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் இங்கு கால்கோள் விழா நடக்கும். இதுபோல மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதிகளிலும் புதிய மேம்பாலங்கள் அமைக்க மதிப்பீடு தயாராகி வருகிறது.

இந்த ஆண்டில் கோட்டார், செட்டிக்குளம் பகுதியிலும் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுகினசேரி பாலத்தை விரிவுப்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.

மதுரை–கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரெயில் பாதை திட்டத்திற்கு ரூ.3,400 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.1000 கோடிக்கான பணிகள் குமரி மாவட்டத்திலேயே நடக்க உள்ளது.

நாகர்கோவிலில் 4 வழிச்சாலைக்கான நில ஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது. நாகர்கோவில்–காவல் கிணறு வரையிலான 4 வழிச்சாலைக்கும், கன்னியாகுமரி–நாகர்கோவில் இடையிலான 4 வழிச்சாலைக்கும் இடையே 12 கிராமங்கள் உள்ளன.

இங்கு நில ஆர்ஜித பணி 99 சதவீதம் முடிவு பெற்றுள்ளது. நாகர்கோவில்–களியக்காவிளை இடையேயான 4 வழிச்சாலைப்பணிக்கு 50 சதவீத நில ஆர்ஜிதம் முடிந்துள்ளது. இப்பணிகளுக்கான நிவாரண நிதியாக ஆரம்பத்தில் ரூ.57 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அது 6 மடங்கு அதிகரித்து ரூ.343 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்திட்ட செயலாக்க இயக்குனர் சிவகுமார், அதிகாரி முத்துடையார், நாகர்கோவில் நகரசபை தலைவி மீனாதேவ், மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் கணேசன், துணைத் தலைவர் தேவ், வர்த்தக அணி தலைவர் முத்துராமன், வரவேற்பு குழு தலைவர் ராஜன் மற்றும் வேல்பாண்டியன், குமரி ரமேஷ், தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Loading...