Designed by Iniyas LTD
மத்திய தரைக்கடலில் விழுந்த எகிப்திய விமானம்!
பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து எகிப்திய கெய்ரோ நகருக்கு 66 பேருடன் பயணித்த எகிப்துஎயார் விமானமொன்று வியாழக்கிழமை அதிகாலை மத்தியதரைக் கடலில் விழுந்துள்ளதாக கிரேக்க பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
அந்த விமானம் ஆரம்பத்தில் ராடர் கண்காணிப்பு கருவியிலிருந்து காணாமல் போயிருந்தது.
மேற்படி விமானம் கடலில் விழுந்துள்ளதை பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்படி விமானம் சடுதியாக இடது பக்கமாக 90 பாகையும் வலது பக்கமாக 360 பாகையும் திரும்பி 37,000 அடி உயரத்திலிருந்து வீழ்ந்ததாக கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் பானொஸ் கம்மெனொஸ் தெரிவித்தார்.
ஆனால் அதன்போது அந்த விமானத்திலிருந்து உதவி கோரி அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த விமானம் இவ்வாறு விழுந்துள்ளமைக்கு தீவிரவாத தாக்குதல் காரணமாக இருக்கக் கூடும் என சந்தேகிப்பதாக கிரேக்க அமைச்சர் ஒருவர் தெரிவித்தாக பிரித்தானிய டெயிலிமெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பி.ஈ.ஏ. தேசிய விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவர் ஜீன் போல் திரோ டெக் தெரிவிக்கையில்,
அந்த விமானம் இவ்வாறு எதுவித அவசரகால நிலைமை எச்சரிக்கையுமின்றி விழுந்துள்ளமை மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என தெரிவித் தார்.
மேற்படி விமானம் எகிப்திய நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் கிரேக்க வான் பரப்பைக் கடந்ததும் ராடர் கருவியிலிருந்து மறைந்துள்ளது.

மாயமான அந்த எம்.எஸ்.804 விமானத்தில் சம்பவம் இடம்பெற்ற போது இரு குழந்தைகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 56 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் 3 பாது காப்பு உத்தியோகத்தர்களும் இருந்தாக எகிப்துஎயார் விமானசேவை நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் காணாமல்போன விமானத்தைத் தேடும் நடவடிக்கையில் கிரேக்க மற்றும் எகிப்திய ஆயுதப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேடுதல் நடவடிக்கைக்கு உதவும் முகமாக பிரான்ஸ் படகுகளையும் விமானங்களையும் அனுப்பிவைத்துள்ளது.
மேற்படி விமானத்தில் 30 எகிப்தியர்களும் 15 பிரான்ஸ் பிரஜைகளும் 2 ஈராக்கியர்களும் பிரித்தானியா, கனடா, பெல்ஜியம், குவைத், சவூதி அரேபியா, அல்ஜீரியா, சூடான், சாட் மற்றும் போத்துக்கல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் பயணித்ததாக எகிப்துஎயார் நிறுவனம் கூறுகிறது.
அந்த விமானம் பாரிஸின் சார்ள்ஸ் டி கோலி விமான நிலையத்திலிருந்து அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை இரவு 11:09 மணிக்குப் புறப்பட்டு எகிப்திய தலைநகரை வியாழக்கிழமை அதிகாலை 3:15 மணிக்கு சென்றடைய இருந்த நிலையிலேயே அது காணாமல்போயுள்ளது.
ராடர் கருவியிலிருந்து மறைந்த போது அந்த விமானம் எகிப்திய வான் பரப்புக்குள் பிரவேசித்து 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்ததாக எகிப்துஎயார் நிறுவனம் கூறுகிறது.
அந்த விமானம் காணாமல்போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானியுடன் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரையாடியிருந்ததாகவும் அதன்போது விமானத்தில் பிரச்சினை எதுவும் இருப்பதாக விமானி தெரிவிக்கவில்லை எனவும் கிரேக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் எகிப்திய பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் கெய்ரோ விமான நிலையத்துக்குச் சென்று அந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுடன் உரையாடினார்.
இதன்போது அந்த விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்பது தொடர்பில் பரவி வரும் ஊகங்கள் தொடர்பில் விமர்சனம் எதனையும் வெளியிட மறுத்த அவர், தற்போது எதனையும் கூறமுடியாதுள்ளதாக தெரிவித்தார்.
அதேசமயம் பாரிஸின் சார்ள்ஸ் டி கோலி விமான நிலையத்துக்கு விஜயம் செய்த பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் ஜீன் மார்க் அரோல்ட், இந்த சம்பவம் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களைப் பொறுத்தவரை உணர்வு ரீதியான பதற்றநிலையை ஏற்படுத்துவதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி விமான அனர்த்தம் தொடர்பில் எகிப்திய மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டு உரையாடியதுடன் தத்தமது நாடுகளைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை மேற்கொண்டனர்.
கடந்த மார்ச் மாதம் எகிப்து எயார் விமானமொன்று கடத்தப்பட்டு திசை மாற்றப்பட்டது. பின்னர் அந்த விமானத் தைக் கடத்தியவர் சரணடைந்த துடன் அனைத்துப் பணயக்கைதிகளும் பாது காப்பாக மீட்கப்பட்டனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ரஷ்ய விமானமொன்று எகிப்திய சினாய் தீபகற்பத்துக்கு மேலாக வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தில் அதில் பயணித்த 224 பேரும் கொல்லப்பட்டனர். மேற்படி விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியி ருந்தனர்.