Designed by Iniyas LTD
மத்திய-மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு இல்லையெனில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் : ராஜ்நாத் சிங்
மத்திய-மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு நிலவவில்லையெனில், வளர்ச்சித் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தில் (மாநில முதல்வர்கள் கூட்டம்), அவர் பேசியதாவது:
மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கூட்டாட்சியை ஊக்குவிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. அது கூட்டுறவு கூட்டாட்சியாகவோ அல்லது போட்டிமிக்க கூட்டாட்சி கொண்ட கூட்டுறவு கூட்டாட்சியாகவோ இருக்கலாம். கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்தவே, திட்டக் குழுவை கலைத்து விட்டு, மத்திய கொள்கைக் குழுவை (நீத்தி ஆயோக்) மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியது.
அனைத்து மாநிலங்களுக்கும் கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாக திட்டக் குழு இருந்தது. அதில் இயற்கையாக காணப்பட்ட குறைபாடுகளை போக்கவே நீத்தி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலம், மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்குத் தேவையான திட்டங்களை தாங்களே வகுத்து செயல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நெருங்கிய மற்றும் செயல்படக் கூடிய ஒத்துழைப்பும், வளர்ச்சித் தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அதைச் செயல்படுத்துவதில் கூட்டுறவும் நிலவ வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நம்பிக்கைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகத்தான், 14-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு மிக அதிகளவுக்கு நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும்போதும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும்போதும், வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் பாதிப்பு ஏற்படுவது இயல்புதான்.
சர்க்காரிய கமிஷனின் அறிக்கையைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைப்பு கடந்த 1990-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளில், வெறும் 10 முறை மட்டுமே, இக்கவுன்சிலின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இக்கவுன்சில் கூட்டத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கூட்டியுள்ளது. இதிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (சப்கா சாத், சப்கா விகாஷ்) என்ற மத்திய அரசின் கொள்கை பிரதிபலிப்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார் ராஜ்நாத் சிங்.