தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனிதப்புதைகுழி எச்சங்கள் பரிசோதனைக்காக அமெரிக்கா அனுப்பப்படவுள்ளதாம்!

140311155301_mannar_mass_grave_sri_lanka_304x171_bbc_nocreditமன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை பரிசோதனைகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு அனுப்பிவைக்க ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்ததாக காணாமல்போனாரின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான பரிசோதனைகளுக்கு காணாமல்போனோரின் உறவுகளால் ஏற்கனவே மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க நிறுவனத்தில் பரிசோதனை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அனுமதி கோரியுள்ளது. எனினும் இதற்கு நாம் ஏற்கனவே எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். குறித்த நிறுவனம் ஒரு சிறந்த நிறுவனம் இல்லை. குறித்த நிறுவனம் எவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்கின்றது என்பது குறித்து மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
மேலும் மாத்தறை மனித புதைகுழி விவகாரம் குறித்து சுட்டிக்காட்டிய சட்டத்தரணி நிறைஞ்சன், ‘ இந்த விடயத்தில் இதே அமெரிக்க நிறுவனம் அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மிருகத்தின் எலும்புக்கூடுகள் என்ற தகவலை வெளியிட்டது. இதனடிப்படையில் இந்நிறுவனத்தின் மீது காணாமல் போனவர்கள் சார்பில் நம்பிக்கை இல்லை. எனவே இவ்விடயம் குறித்து நாம் எதிர்ப்பை தெரிவித்தோம்.’ என குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி மனித புதைகுழிக்கு அருகில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு தொடர்பான வழக்கும் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்விரு வழக்கு விசாரணைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Loading...