Designed by Iniyas LTD
மனிதவுரிமை நிலை தொடர்பில் அல் ஹூசைன் ஐ.நா வில் உரை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 31 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை 29 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது அமர்வின்போது உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுஸைன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பேரவைக்கு விளக்கம் அளிக்கவுள்ளார்.
செய்ட் அல் ஹுஸைன் தனது நீண்ட உரையில் இலங்கை தொடர்பாக ஒரு பகுதியை ஒதுக்கி உள்ளார் எனவும் அதனூடாக இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான தனது குறுகிய விளக்கத்தை அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொறு தினமும் இதுவரை நிகழ்ச்சி நிரழ் அட்டவனையில் ஒதுக்கப்படவில்லை.
எனினும் நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும்போது அவ்வப்போது இலங்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என கூறப்படுகின்றது. இலங்கையின் சார்பில் ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரவநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் 31 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள், முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் குறித்து இம் முறை 31 ஆவது கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடுகளினால் விரிவாக ஆராயப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள முதலாவது அமர்வில் மனித உரிமைப் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங் ஐ.நா பொதுச் சபை தலைவர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
அதன் பின்னர் பல்வேறு உறுப்பு நாடுகள் உரையாற்றவுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநியும் முதலாம் நாள் அமர்வில் உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி செவ்வாய் மற்றும் புதன் கிழமை தினங்களில் ரஷ்யா,சுவீடன், நோர்வே, ஜப்பான், இத்தாலி, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதியும் உரையாற்றவுள்ளனர்.
இம்மாதத்தின் ஆரம்ப பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்திருந்தார். தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கருத்து வெளியிட்டிருந்த ஹுசென் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பது இலங்கையின் இறைமை தொடர்பான முடிவாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பரிந்துரைகளை முன்வைக்கலாம். ஆனால் தீர்மானம் எடுப்பது இலங்கையின் இறைமையாகும். இந்த செயற்பாட்டின் இறுதியில் பாதிக்கப்பட்டோர் தமக்கு வழங்கப்பட்ட நீதி தொடர்பில் திருப்தி அடையவேண்டும். நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும். ஐ.நா. இதனை நல்லது என்றோ கெட்டது என்றோ சொல்லுவது இறுதி முடிவு அல்ல. பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், பிள்ளைகள் , மனைவிமார்கள், அரசாங்கம் திருப்திகரமாக செயற்பட்டுள்ளது என்று கூறுவதே இங்கு முக்கியமானதாகும் என்றும் அல் ஹுசேன் கூறியிருந்தார்.
மேலும் எமது அறிக்கையில் நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை. அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத் தெரியும். இது தொடர்பில் இலங்கையில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கைப் பாராளுமன்றத்தில் அவ்வாறான சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும். எனவே இங்கு சர்வதேச நீதிமன்றம் என்ற விவகாரம் விவாதத்திற்குட்படவேண்டிய அவசியமில்லை. இது இலங்கையின் செயற்பாடாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணையை அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் தாக்கல் செய்திருந்தன. இறுதியில் இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பிரேரணைக்கு அனுசரணை வழங்கியிருந்தன.
இந்தப் பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய வெளிநாட்டு நீதிபதிகள் சட்டத்தரணிகள் வழக்கறிஞர்களைக்கொண்டு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்து. பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.