தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனித உரிமை தினத்திலும் வட, கிழக்கு மக்கள் வீதியில் போராடும் அவலம்: பா.அரியநேத்திரன் எம்.பி

ariyanenthiranமனித உரிமை தினத்தில் கூட வட,கிழக்கு உள்ள மக்கள் எந்த வித சுதந்திரமும் இன்றி வாழ்ந்து கொண்டிருப்பதனை இன்று எமது பிரதேசங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றது என,  த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

விவசாய, நீர்வளங்கள் வடிகாலமைப்புச்சபையின் விவாதத்தின் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் இங்கு உரையாற்றுகையில்,

த.தே.கூட்டமைப்பினர் என்றும் அபிவிருத்திக்கு தடையானவர்கள் அல்ல என்பதனை ஒவ்வொருவரும் நன்கு அறிந்து கொள்ளவேண்டும். அபிவிருத்தியானது சுதந்திரத்துடன் அனுபவிக்கும் அபிவிருத்தியாக இருத்தல் வேண்டும் என்பதனைத்தான் எமது கட்சி வலியுறுத்தி வருகின்றது.

மனித உரிமைகள் தினமான இன்று வடகிழக்கின் பல பாகங்களிலும் எமது மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

வடமாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கவனஈர்ப்பு போராட்டமும், திருகோணமலையிலே காணாமல்போனோர் தொடர்பான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இராணுவத்தினரினால் ஏவிவிடப்பட்ட குண்டர்கள் குழுவினர் அங்கு சென்று அடாவடித்தனம் செய்து இரண்டு பேர் காயங்களுடன்’ வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

இதே போன்று இரண்டு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை திருக்கோயில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றார்கள் தங்களது கால்நடைகளைக்கூட மேய்ப்பதற்கு இடம்இல்லாத நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

வவுனியாவிலும் எமது கட்சியின் உறுப்பினர்களும், மனித உரிமைஆர்வளர்களும், கட்சி ஆதரவாளர்களும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதுதான் எமது மக்களின் இன்றைய நிலை.

அம்பாறை மாவட்டத்திலே 1976ஆம் ஆண்டு திருக்கோயில் வட்டமடு பகுதியில் 4000 ஏக்கரில் 40,000 கால்நடைகள் மேய்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று 1380 ஏக்கரை தன்னிச்சையாக ஒரு இனத்திற்கு மாத்திரம் வழங்கிருக்கின்றார்கள் இந்த இனத்தின் அமைச்சர் இது தொடர்பாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தும் இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

மனித உரிமை சாசனத்தில் கூறப்பட்ட விடயம் என்னவென்றால். எல்லா மக்களும், குழுக்களும் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் எனவும் சுயநிர்ணயத்தின் மூலம் அரசியல் அந்தஸ்தினை சுயமாக தீர்மானிப்பதும், தமது சமூக,பொருளாதார, கலாசார, அபிவிருத்திகளை சுயமாக முன்னெடுப்பதாகவும் என்று தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு,கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

இன்று கிருமிநாசினி பாவனையினால் கூட வடகிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் 15 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என உலக சுகாதார அறிக்கைகூட சுட்டிக்காட்டுகின்றது. இதன்மூலம் நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக நோய் என்பன மக்களை தாக்குவதாகவும் கூறப்படுகின்றது.

இதனை வைத்துப்பார்க்கும் பொழுதும் வடகிழக்கு மக்களே இலங்கையில் அதிகமாக பாதிக்கப்டுகின்றார்கள் காரணம் இலங்கையில் 25000 பேர் பாதிக்கப்டும் சந்தர்ப்பத்தில் வடகிழக்கில் 15 வீதமானோர் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையினையும் அவதானிக்க வேண்டியிருக்கின்றது. இதுதான் எமது மக்களின் நிலை என்றும் கூறினார்.

 

Comments
Loading...