Designed by Iniyas LTD
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் நாள் நிகழ்வினை தடுக்க முற்பட்ட இனத்துரோகிகள்!
மன்னார் ஆண்டான்குளம் ஆட்காட்டிவெளியில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடைபெறவிடாது தடுப்பதிலும் மக்கள் பிரதிநிதிகளை பங்கெடுக்கவிடாமல் தடுத்தமையிலும் மதத்துறவிகள் சிலர் முன்னின்று செயற்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல காணி தமக்கு சொந்தமானதென தெரிவித்து அப்பகுதி பங்கு தந்தை டெஸ்மன் மற்றும் குருமுதல்வர் விக்டர் சோகை ஆகியோர் காவல்துறைக்கு முறைப்பாடு செய்தததுடன் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் சக கத்தோலிக்க துறவிகளிடையே கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. அத்துடன் அவர்கள் மாவீரர் நாள் தடை தொடர்பாகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் ஆயர் இல்லத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த பங்கு தந்தை டெஸ்மன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களது பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் மருமகன் எனவும் அவர் ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை நினைவேந்தலில் பங்கெடுக்கவிடாது தடுத்ததாகவும் ஏற்பாட்டுக்குழு சார்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்போராட்ட வரலாற்றில் மன்னார் ஆயர் இல்லம் கடந்த காலங்களில் ஆற்றிய பங்கு சொல்லில் வடிக்க முடியாததொன்று. எனினும் தற்போது மாவீரர் தின நினைவேந்தலை அதே பங்கினை சேர்ந்த சிலர் தடுத்தமை பற்றி ஆயர் இல்லம் அறிந்திருக்கவில்லையாவெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.