தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னார் மடுப் படுகொலை – 29 ஜனவரி 11 ஆம் ஆண்டு நினைவு நாள்…

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக்கப்பட்டுள்ள யுத்தம் காரணமாக திருப்பதி வளாகத்திலுள்ள சிறார்கள் 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள, தட்சணாமருதமடுவில் இயங்கிவந்த சின்னப்பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலே கல்விகற்று வந்தனர்.

அவர்கள் மடுவிலிருந்து புறப்படுகின்ற பயணிகள் பேரூந்திலேயே சென்று வருவார்கள்.

இங்கு பாடசாலை மாணவர்களுக்கு தனியாக பொதுமக்களுக்குத் தனியாக என பேருந்து இல்லாமையால் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்ற பேரூந்திலேயே பயணிப்பார்கள்.

அவ்வாறே கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் நாளும் வழமைபோல் பேரூந்தில் சென்ற சிறுவர்கள் பிற்பகல் பாடசாலை முடிந்ததும் இலுப்பக்கடவையிலிருந்து மடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அதே பேரூந்தில் ஆனந்தமாக வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்,

பேரூந்து மடுவை அண்மித்ததும், சரியாக 2.30 மணியளவில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் இப்பேரூந்தின் மீது கிளைமோர்த் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதில் 09 பாடசாலை சிறார்கள் 01 ஆசிரியர், 01 பாடசாலைச் சிற்றூழியர், 01 மருத்துவ உதவியாளர், 01 பேரூந்தின் ஓட்டுநர், 01 பேருந்தின் நடத்துனர், 01 மடுத்தேவாலய உழவூர்தி ஓட்டுநர் என 15பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இலங்கைப்படையின் இந்த வெறியாட்டத்தில் 13 மாணவர்கள் உள்ளடங்கலாக 21பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தள்ளாடி முகாமிலுள்ள இராணுவத்தினர் அப்பகுதி நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதனால் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே அப்பகுதி மக்கள் படுகாயமடைந்தவர்களை பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர்  அங்கிருந்து உடனடியாக முழங்காவில் வைத்திய சாலைக்கு காயமடைந்தவர்கள்  மாற்றப்பட்டனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர்களில் ஜெனிஸ்ரன் பீரிஸ் என்ற சிறுவன் பெப்ரவரி 03ஆம் நாள் உயிரிழந்தார்.

மேலும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பாடசாலை அதிபர் பெப்ரவரி 05ஆம் நாள் மரணமானார். இதனைத் தொடர்ந்து இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.

இலங்கை அரச படைகளின் இரக்கமற்ற 11 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...