Designed by Iniyas LTD
மன்னார் மனித புதைகுழியை பார்வையிடுவதற்காக அமெரிக்கா தூதரக அதிகாரி..
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அங்கு பல்வேறு கேள்விகள் சந்தகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இதுவரை 151 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 144 மனித எச்சங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்வதனால் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுவதாகவும், இதன் காரணமாக சதொச வளாகம் முழுவதையும் மூட வேண்டிய தேவை இருப்பதனால் அவ் ஏற்பாடுகள் தொடர்பாக தெரியபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது சதொச வளாகத்தில் இருந்து ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட ஏதேனும் தடயப் பொருட்கள் கிடைத்தனவா? என ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த சட்ட வைத்திய அதிகாரி இதுவரை ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த ஒரு தடய பொருட்களும் அடையாளப்படுத்த படவில்லை எனவும்,
ஆனாலும் அடையாளபடுத்த முடியாத நிலையில் சில தடய பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் குறிப்பிட பொருட்கள் இவ்வகையை சேர்ந்தவை என்பது தொடர்பான துல்லியமான தகவல் அறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் மன்னார் மனித புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான அமெரிக்கா தூதரகத்தில் இருந்து அதிகாரி ஓருவரும் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
