Designed by Iniyas LTD
மன்மோகன் பதவி விலகலா?- பிரதமர் அலுவலகம் மறுப்பு
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மன்மோகன் சிங், வரும் 3-ம் தேதி பதவி விலகப்போவதாக வெளியாகியுள்ள தகவலை, பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3-ல் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அந்தச் சந்திப்பில் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகப் போவதாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், மூன்றாவது முறை பிரதமராக நீடிக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவி விலகல் முடிவு தொடர்பான செய்திகளை மறுத்துள்ள பிரதமர் அலுவலகம், அந்தச் செய்தி யூகத்தின் அடிப்படையிலானது என்றும், பிரதமர் தனது பதவிக் காலம் வரை முழுமையாக நீடிப்பார் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமவர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். எனினும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைதான் முடிவு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பாதகமான நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.