Designed by Iniyas LTD
மருமகனை கேட்டால் பேரப்பிள்ளையும் காணாமல் போகும் என மிரட்டியதாக சாட்சியம் அளித்த தாய்.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்று வருகின்றன. இறுதி நாள் அமர்வு மண் முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது சாட்சியமளித்த கந்தையா மகேஸ்வரி காணாமற்போன எனது மருமகன் தொடர்பில் 22 வருடங்களின் பின்னர் கிடைத்த தகவலுக்கு அமைய, வவுனியா தடுப்பு முகாமில் முறைப்பாடு பதிவு செய்தேன்.இதன் காரணமாக எனது பேரப்பிள்ளையைக் கடத்தி விடுவோம் என்று தொலை பேசியூடாக இனந்தெரியாதோர் மிரட்டுவதாகக் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
1991 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி எனது மருமகன் கித்துள் கிராமத்திலுள்ள வயலுக்குச் சென்றார். அங்கு வைத்து சிங்களப்படைகள் அவரைப் பிடித்துச் சென்றனர். இதனை யடுத்து நான் மருமகனைக் கொண்டு சென்ற படை முகாமுக்குச் சென்று கேட்டேன். மருமகனை அவரது கையைப் பின்னால் கட்டி அங்கே வைத்திருந்தார்கள். அவரை விடுவிக்குமாறு நான் கேட்டேன். அவரை விசாரித்த பின்னர் விடுவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படவுமில்லை. அவரைப் பற்றிய தொடர்பும் எமக்குக் கிடைக்கவில்லை.
கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் எங்களுக்குத் தெரிந்த ஒருவர், எனது மருமகன் வவுனியா தடுப்பு முகாமில் இருப்பதாகத் தெரிவித்தார்.அங்கு சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் கூறினார். அதற்கமைய நான் வவுனியாவுக்குச் சென்று முறைப்பாடு கொடுத்தேன்.அதன் பின்னர் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் இனந்தெரியாதோர் தொலை பேசியூடாக எனக்கு மிரட்டல் விடுத்தனர். இனி இப்படி தேடி வந்தால் உங்களது பேரப் பிள்ளையும் காணாமற்போய் விடுவார் என்று எச்சரித்தனர். அவர்களை யாரென்றே தெரியாது-என்றார்.