Designed by Iniyas LTD
மர்ம நோயால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலி!
திருவண்ணாமலை அருகே மர்ம நோய் தாக்கிய கிராமத்தை சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்கை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலை அருகே உள்ள தண்டரை கிராமத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 13), நெல்சன் (11), பிரித்திகா என்ற மெர்லின் (7), வினோத்குமார் (26), அமுதா (23), முனுசாமி (75), ஜோசன் (70) ஆகியோர் தொடர்ச்சியாக இறந்தனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி இதே கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தா (65), அம்ச வள்ளி (60), கோபிகா (7) ஆகியோர் உடல்நலக்குறைவால் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் கிறிஸ்தா கடந்த 29-ந் தேதி திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 31-ந் தேதி உயிரிழந்தார். இதனால் அந்த கிராமத்தில் மர்ம நோய்க்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தனர். அதிலும் 6 பேர் கிறிஸ்தாவின் உறவினர்கள் ஆவர்.
இந்த நிலையில் கிறிஸ்தாவின் பேரனும், பெங்களூருவில் பணிபுரிபவருமான வின்சென்ட் பிரபாகர் (23) என்பவரும் தொடர்ச்சியான வாந்தி ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வின்சென்ட் பிரபாகரின் உடல் நிலையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தகவல் தெரிவித்து வருகிறோம்’’ என்றனர்.
இதற்கிடையே அக்டோபர் 31-ந் தேதி இறந்த கிறிஸ்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உணவில் ரசாயன விஷம் கலந்தது காரணமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், ‘‘பிரேத பரிசோதனை அறிக்கை இன்னமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இன்று மாலை கிடைக்கும் என்று நினைக்கிறோம். அதன் பின்னர் தான் அது பற்றிய முழு விவரத்தை நாங்கள் வெளியிட முடியும்’’ என்று அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே கிறிஸ்தாவின் உடல் உறுப்பின் மாதிரி, சாப்பிட்ட உணவின் மாதிரி பரிசோதனைக்காக வேலூரில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
‘‘இந்த பரிசோதனை முடிவு கிடைக்க 2 மாதம் ஆகும். ஆனால் முன்னமே தருமாறு கேட்டிருக்கிறோம்’’ என்று அதிகாரிகள் கூறினர்.