தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மறுவாழ்வு, மகளிர் விவகார அமைச்சராக திருமதி அனந்தி சசிதரன்!

மூன்று மாத காலத்துக்கு அமைச்சர்களாக திருமதி அனந்தி சசிதரனையும், மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரனையும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்பாக இருவரும் இன்று காலை 10 மணிக்கு சத்தியப்பிரமாணம் மேற்கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடனும் பங்காளிக் கட்சிகளுடனும் பேசியே அமைச்சர்கள் நியமனம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். திருமதி அனந்தி சசிதரனை அமைச்சராக நியமிக்க முதலமைச்சர் விருப்பம் வெளியிட்டபோதும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளமையால் தமிழ் அரசுக் கட்சி அதனை நிராகரித்திருந்தது.

தமது தரப்பில் இருந்து மாகாண சபை உறுப்பினர் இ.ஆனோல்ட்டை அமைச்சுப் பதவிக்கு தமிழ் அரசுக் கட்சி பரிந்துரை செய்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேச்சு நடத்தாமலும், பங்காளிக் கட்சிகளுடன் ஆராயாமலும் முதலமைச்சர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஸ்பிரேமசந்திரனின் சகோதரரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான க.சர்வேஸ்வரனும், சமூகசேவை, மறுவாழ்வு, மகளிர் விவகார அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநருடன் முதலமைச்சர் இந்த நியமனங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போது ஆளுநர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இ.ஆனோல்ட்டை பரிந்துரைத்த கடிதத்தின் பிரதியை எனக்கு அனுப்பியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

நாளை (இன்று) அமைச்சர்கள் பதவியேற்புக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று மதியம் ஆளுநருக்குத் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், நேற்று மாலை 6 மணிக்கு தனக்கு ஆதரவாக கையெழுத்திட்ட 15 பேரை மாத்திரம் அழைத்துச் சந்திப்பு நடத்தினார்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கும்போது, எனது அமைச்சுக்கு மேலதிகமாக இரு அமைச்சுக்களையும் வைத்திருப்பதால் பல சிக்கல்கள் வருகின்றது. இதனால் தற்காலிக ஏற்பாடாக 3 மாதங்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்களை, திருமதி அனந்தி சசிதரனுக்கும், க.சர்வேஸ்வரனுக்கும் வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். விவசாய அமைச்சு தன்னிடமே தொடர்ந்தும் இருக்கும் என்றும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

Comments
Loading...