Designed by Iniyas LTD
மழைக்காலத் தவளைகள் – சித்ரா நவநீதன்
மழைக்காலத் தவளைகள் சத்ததில்
தூங்கியதும் தூங்க ஏங்கியதுமாக
எத்தனை இரவுகளை விழுங்கிவிட்டிருந்தது அந்த துப்பாக்கி
மறைந்து போயிருந்த பகலவனின் மை இருட்டு பொழுதுகளில்
உறைந்து போயிருந்தது ஊர்மட்டுமில்லை எம் குருதியும்
புகையிலை பற்றவைத்து புதருபக்கம் போன பொன்னம்மா
புலரும் பொழுதாகியும் வீடுவந்து சேரவில்லையென
வசந்தி அக்கா அழும் சத்தம் சற்று கழித்து ஒப்பாரியாய் மாறி இருந்தது
கூட்டமாய் நின்று பேசியதாய் குற்றம்சாட்டபட்டு
இந்த இரவோடு காணாமல் போனவர்கள் இருபதுக்கும்மேலிருக்கும்
ஓட்டப்போட்டியில் முதலிடம் வரும் யசோதா
ஒற்றை காலுடனும் அக்கிள் தடியுடனும் வந்து போனாள்
சொன்னால் கேளு , எல்லாம் முடிந்துவிட்டதுஎன சொல்லி
அந்த இரவின் வழமையை மீறிய நிசப்தம் அன்னியமாய் பட்டது
தவளை சத்தம் மீறிய விம்மல் சில நொடி கடந்து
அழுகையாய், ஆத்திரமாய், உறைந்த குருதிக்கலன்களின் வெப்பத்தால் வெடித்தன
சீசியத்தின் பரவசநிலைக்கும் இயல்பு நிலைக்குமான நேரமே
வாழ்தலுக்கான சாதலாய் மாறிபோயிருந்தது
கற்பிழந்து கருப்பை கிழிந்து இன்னும் என்ன இருக்கு இழக்க
கைகளை கால்களாக்கி தாண்டி தாண்டி வாசலை அவள் அடையவும்
அந்த இரவு விடியலை நோக்கி இன்னும் சில நொடிகளை நகர்ந்தியிருந்தது
மேகம் பூமி வந்து முத்தமிட்டுகொண்டிருந்தது
அவள் ஏற்றி வைத்த தீயில் அவள் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது
பூவெல்லம் உங்களுக்கானது அந்த மொட்டுக்கள் உங்களுக்கானது
நள்ளிரவு பாடல் எழுதி விடைபெற்றது கார்த்திகை இருபத்தேழுக்காக
சித்ரா நவநீதன்