Designed by Iniyas LTD
மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன் – சரத் என் சில்வா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடுமையாக சாடியுள்ளார். சிங்கள இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது, மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்தின் கருணை காரணமாக பல தடவைகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.
1979ம் ஆண்டு கலவானை தொகுதி இடைத் தேர்தலின் போது சரத் முத்தெட்டுவேகம சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்புக்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதற்காக அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது. எனினும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நீதிமன்றத்தின் கருணை காரணமாக அந்தத் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
அதே போன்று 83ம் ஆண்டு பெலியத்தைத் தொகுதி இடைத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மூவர் மீது மஹிந்த ராஜபக்ஷ துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார். இதில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்திருந்தார். இந்தச் சம்பவத்திலும் நீதிமன்றத்தின் கருணை மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக அமைந்தது. எனினும் அவர் ஒரு கொலைகாரன் என்ற விடயம் மட்டும் இன்றளவும் மக்கள் மனங்களில் இருந்து மாறவில்லை.
அதேபோன்று ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் அவர் கோடிக்கணக்கில் ஊழல் புரிந்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை குறித்து தன்மீது அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் நீதிமன்றத்தின் கருணை காரணமாக மஹிந்தவுக்கு சாதகமான முறையில் தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது. எனினும் அவர் கொள்ளைக்காரன் என்பது உண்மை. அதனை யாராலும் மறுக்க முடியாது.
இந்த வகையில் மஹிந்தவின் ஆரம்பம் கொலை, கொள்ளை என்பதாகத் தான் இருந்துள்ளது. இப்படிப்பட்ட ஒருவரை இன்னொரு தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால் தற்போது குற்றுயிரும், குலையுயிருமாக போராடும் ஜனநாயகம் முழுமையாக செத்துவிடும் என்றும் சரத் என் சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.