Designed by Iniyas LTD
மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பளித்து உதவவவேண்டும்! சாந்தி சிறீஸ்கந்தராஜா
சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று (03) இந்த தினத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பளிப்பதற்காக திடசங்கர்ப்பம் கொள்ளுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா கோரிக்கை விடுத்தள்ளார்.
மாற்றுத்திறனாளிகளை அதிகமாக கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் சிதைவடைந்து காணப்படுகின்றது. அதனைவிட அவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் போது அல்லது தமது தேவைகளை நிறைவு செய்துகொள்ள செல்கின்ற இடங்களிலும் கூட பல்வேறு துன்பங்களை அனுபவித்துவருகின்றனர்.
நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்திருக்கின்றவள் என்பதனால் மாற்றுத்திறனாளிகளின் வலிகளை அறிவேன் அந்தவகையில் பொதுவாக எமது உறவுகள் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை கூட வழங்காத சந்தர்ப்பங்களை அவதானிக்கின்றோம்.
பொது இடங்களில் பொதுத்தேவைகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காது செயற்ப்படுகின்றோம். இந்நிலை மாற்றப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளை கண்டு நிலைபேறான அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த 7 வருடங்களாக அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் பலர் வசித்து வருகின்றார்கள்.
அரசாங்கத்தினால் வீட்டுத்திட்டம் மற்றும் மலசலகூட வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை தொட்டும் பாதியும் தொடர் பாதியுமாக இருக்கின்றது.முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் குடிநீர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.மாற்றுத்திறனாளிகளின் நிலைபேறான வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
இவைகளை ஒருபுறம் ஆற்றினாலும் மறுபுறம் அவர்களுக்கு உளவியல் ரீதியாக துன்புறுத்தல்களும் தொடர்கிறது எனவே இந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைவரும் முடிந்தவரை உதவுவோமென திடசங்கர்ப்பம் கொள்வோம் என கோரிக்கை விடுத்துள்ளார்.