Designed by Iniyas LTD
மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்,பிரதேச சபை தவிசாளர் ஆகியோரின் உறுதிமொழியுடன் உணவுதவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது…
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த கி தரணிதரன் நேற்றுகாலை துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
சேதமடைந்த வீடுகளுக்கான நடவடிக்கை 7 வருடங்கள் கடந்தும் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை தண்ணீர் வசதியின்மை பாதை திருத்தம் வாழ்வாதாரம் காட்டு யானைகளின் தொல்லை உள்ளிட்ட 6 பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க கோரிஅவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
குறித்த துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டமானது 2012 ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிளில் SLRC நிறுவனத்தால் 50 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு காணிகள் வழங்கப்பட்டு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மாற்றுவலுவுள்ளோர் அடங்கலாக 50 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்
இருப்பினும் அவர்களது அடிப்படைதேவைகள் பூத்தி செய்யப்படாத நிலையில் வீடுகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் அங்கு வாழ முடியாத நிலையில் பல குடும்பங்கள்
அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில் அந்த வீடுகளில் வேறு நபர்களை குடியிருத்தியும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில்,
தற்போது குறித்த பகுதியில் 31 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களது அடிப்படை தேவைகள் உள்ளடங்கலாக 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இதனைதொடர்ந்து குறித்த நபரை சந்தித்த துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் இவர் குறிப்பிட்ட 3 பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் குடிநீர் பிரச்னையை நீக்க 2 கிணறுகள் உடனடியாக சுத்தப்படுத்தி பாவனைக்கு ஏற்றவகையில் தருவதாகவும் ,
ஒரு மாதகாலத்தில் குறித்த பகுதியில் உள்ள குழாய் கிணறுகள் அனைத்தையும் திருத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும் நிரந்தரமாக குறித்த பகுதிக்கு நீர் விநியோகத்துக்கென 2.5 மில்லியன் ரூபாக்கான திட்டமுன்மொழிவு சமர்ப்பித்துள்ளதாகவும் அது நடைமுறைப்படுத்தும் போது நிரந்தர தீரு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்
தொடர்ந்து பாதை பிரச்னைக்கு உடனடியாக நிரந்தரமாக திருத்தமுடியாது எனவும் தற்காலிகமாக மோட்டக்கிரைண்டர் மூலம் வெட்டி தற்காலிகமாக புனரமைத்து தருவதாக உறுதியளித்தார்
தொடர்ந்து யானைப்பிரச்சனைக்கு பொதுவிளக்குகள் பொருத்தி தருமாறு கோரியதற்கு மின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச சபையில் உள்ளது விரைவில் அவை பொருத்தப்படும் எனவும் உறுதியளித்தார்
அதனைவிட அவரது கோரிக்கையில் காணி அனுமதிப்பத்திரம் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்று தருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார் அத்தோடு மாவட்ட செயலாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வீட்டுத்திட்டம் தொடர்பில் குழு ஒன்றை அனுப்பி தீர்மானம் ஒன்றை ஒருமாத காலத்தில் வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் அவர்களின் உறுதிமொழிகளின் அடிப்படையில் ஒருமாத காலம் தனது போராட்டத்தை நிறுத்துவதாகவும் இவைகள் உறுதிமொழி வழங்கியது போன்று நடைபெறாவிட்டால் மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



