தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழ விடுதலைப்புலிகளினால் வெளியிடப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் அறிக்கை.

மாவீரர்நாள் அறிக்கை தரவிறக்கம் செய்ய

 

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப்  புலிகள்,

தமிழீழம்.

நவம்பர் 27, 2021.

 

அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள்.

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக ஒன்றித்து நெஞ்சுருகி நிற்கும் உயர்ந்த நாள்.

எம்மண்ணை ஆக்கிரமித்து, எமது மக்களை அழித்துத், தமிழினத்தைச் சிதைக்கவென வந்த ஆபத்துக்களை எதிர்த்துக் களமாடித், தங்கள் உள்ளம், உயிர், உடல், உடைமை அனைத்தையும் ஆகுதியாக்கிய உத்தமர்களின் நினைவுநாள்.

உலக வரலாறு கண்டிராத பல சாதனைகளைத் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிறதென்றால் எமது மாவீரச் செல்வங்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பும் வீரமுமே அதற்குக் காரணம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தினதும் தியாகத்தினதும் உச்சத்துக்குக் கொண்டு சென்ற பெருமை எமது வீரப் புதல்வர்களையே சாரும். அவர்களது உயிராலும் உதிரத்தாலுமே நாம் புதிய வரலாற்றைப் படைத்திருக்கின்றோம். மக்கள் நலன் சார்ந்தும் சமூக மேம்பாடு சார்ந்தும் தொலைநோக்கோடு செயலாற்றியவர்கள் எமது மாவீரர்கள். தனியே போர்க்களப்பணி என்ற வட்டத்துள் மட்டும் இவர்களைச் சுருக்கிவிட முடியாது. சமூகத்திற் புரையோடிப் போயிருந்த களைகளைக் களைந்து சமூகத்தைப் புத்துருவாக்கத்தோடு மெருகூட்ட அயராதுழைத்த சமூகப் புரட்சியாளர்கள் எமது மாவீரர்கள். தமிழினத்தின் அனைத்துக் கட்டுமானங்களிலும் தமது உழைப்பை நல்கி தமிழினத்துக்கான நிழலரசை நிகழ்த்திக் காட்டியவர்கள் இவர்கள்.

உலகில் அடக்குமுறைக்கு உள்ளாவோரின் நம்பிக்கையாகவும் விடுதலையின் பெருங் குறியீடாகவும் எமது போராட்டத்தைத் தடம்பதித்துச் சென்ற இந்த மானமறவர்களைப் பெற்றெடுத்த பெற்றோரும் குடும்பத்தினரும் போற்றுதற்குரியவர்கள்.

தமிழீழத்தில் ஆயுதப்போராட்டமென்பது வன்முறை மீது கொண்ட பற்றுதலாலோ, ஆயுத மோகத்தாலோ உருவானதன்று. தம்மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ்மக்கள் நடாத்திய தொடர்ச்சியான அறவழிப் போராட்டங்கள் பலனற்றுப்போன நிலையிலும், தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்த நிலையிலும்தான் எமது மக்கள் வேறு தெரிவின்றித் தற்காப்புக்காக ஆயுதப் போராட்ட நெறிமுறையைத் தெரிவு செய்தார்கள். உலகம் முழுவதும் இத்தகைய ஆயுதப் போராட்டத் தெரிவு வேரோடிப் பரவியிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

பண்டைய காலத்தில் மட்டுமல்ல, நவீன யுகத்திலும் உலகநாடுகள் பலவற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது தமிழீழப் போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தை நெறிமுறையாகக் கொண்டு விடுதலைபெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமையும் நியாயத்தன்மையும் எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்கும் உண்டு என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம்.

ஆயினும், இருதுருவ அரசியலுக்குள்ளோ, பிராந்திய நலன்சார் அணிச் சேர்க்கைகளுக்குள்ளோ சிக்குண்டு போகாமல் – தனித்தன்மையோடும் எமது இனத்தின் விடுதலை சார்ந்த சிந்தனையோடும் – உலக அரசியல் உறவின் ஆழத்தை அறிந்தும் புரிந்தும் பயணித்த எமது விடுதலை இயக்கத்தைப், பல நாடுகள் தமது சொந்த, பிராந்திய அரசியல் – பொருளாதார நலன்களுக்காகக் கையாள முற்பட்டமை கவலைக்குரியது. சிங்கள-பௌத்த பேரினவாத அரசுக்கு முட்டுக் கொடுத்தபடி தமிழர்களின் அரசியல் இருப்பை அழித்தொழிப்பதற்குத் துணைபோனதாகவே எமது மக்கள் பன்னாட்டுச் சமூகம் மீதான தமது விசனத்தைக் கொண்டுள்ளார்கள்.

உலக வரலாறு கண்டிராத மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட போதும் சரி, அதன் பின்னரும் சரி, உலகம் தீர்க்கமான நடவடிக்கையேதும் எடுக்கவில்லையென்பது தமிழ்மக்களை வேதனையின் விளிம்பில் கொண்டுபோய் விட்டுள்ளது. தற்போதும்கூடத் தமது நலன்சார் அடிப்படையிலேயே தமிழரின் இனப்பிரச்சனையைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி பன்னாட்டுச் சமூகம் செயற்பட்டு வருகின்றது. சிறிலங்கா அரச பயங்கரவாதத் தலைமையை மிரட்டவும் தமக்கிசைவாகப் பணிய வைக்கவுமே தமிழர் பிரச்சனை கையாளப்படுகிறது.

பிராந்திய மேலாண்மைப் போட்டியிலே தமது பலத்தைப் பரிசீலிக்க எமது அரசியல் பிரச்சனையை உலகம் கையாண்டு வருகிறபோது, மறுபுறம், தன்மீதான அழுத்தங்களைத் தமிழர் மீதான வெறுப்புணர்வாக அறுவடை செய்யும் நோக்கிலே சிறிலங்கா ஆளும் வர்க்கம் குறியாக நிற்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் சர்வதேசம் குறித்த பயப்பீதியை உருவாக்கி, அதன்மூலம் இனவெறியைக் கட்டமைத்து, யுத்தவெற்றிவாத மனநிலையோடு தொடர்ந்தும் சிங்கள மக்களைத் தக்கவைக்க ஆதிக்க சக்திகள் முயல்கின்றன.

கொடிய போர்மூலம் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைச் சிதைத்த சிங்கள-பௌத்த பேரினவாதம் அதன்பின்னர் நடந்துகொண்ட, நடந்துகொள்ளும்  முறைகள் மனித வாழ்வியல் விழுமியங்களுக்கு முரணாணவை. எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றன.

முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்து மீண்ட மக்களால் தமது உறவுகளின் நினைவாக உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைச் சிதைத்தது, யாழ்.பல்கலைக் கழகத்திலிருந்த நினைவுத் தூபியை உடைத்தது, தனக்காகக் கதறும் பல்லாயிரம் மக்களின் அழுகுரல்களைக் கேட்டுக்கொண்டே அணுவணுவாகத் தன்னையுருக்கிய தியாக தீபம் திலீபனுக்கு ஏற்றப்பட்ட விளக்கைச் சப்பாத்துக் காலால் எட்டி உதைத்தது, போன்ற செயல்கள் சிறிலங்கா அரசதரப்பின் காட்டுமிராண்டித்தனம் இப்போதும் தொடர்கின்றது என்பதை எடுத்துக் காட்டுக்கின்றன. இவ்வாறான ஆளும்வர்க்கத்தின் அத்துமீறல்கள் தமிழரின் ஆன்மாவை மீண்டும் மீண்டும் சுட்டுக் கொண்டிருக்கின்றன.

நடுகல் வழிபாட்டை ஒரு தொன்ம மரபாகவே தாங்கி வந்த தமிழினத்துக்கு இந்த நினைவுநாட்களுக்கான உரிமை மறுப்பென்பது இனத்தின் மரபுத் தொடர்ச்சிக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே அமைந்துள்ளது. ஏற்றப்படும் நினைவுச் சுடர்களில் எரிவது வெறும் நெருப்பன்று. காற்றோடும் நிலத்தோடும் கலந்துவிட்ட அருமைச் சொந்தங்களின் நினைவுகளே. இச்சுடர்களுக்கு விடுக்கப்படும் அவமதிப்பு, தமிழினத்தின் உணர்வுகளுக்கு வழங்கப்படும் அவமதிப்பே.

தற்போதும் மாவீரர் நாளுக்கான நீதிமன்றத் தடையாணைகளை அரசதரப்பு வழங்கிக்  கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பேரினவாத அரசிடமிருந்து தமிழர்கள் நாளாந்த வாழ்வுக்கான நீதியைக்கூடப் பெறமுடியாதவர்களாகவே இருக்கிறார்கள். உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூரக்கூட அனுமதி மறுக்கப்படும் ஒரு மானுட விரோத ஆட்சியின் பிடியிலேயே தமிழர்கள் வதைபடுகிறார்கள்.

போரில் வென்ற மமதை சிங்கள-பௌத்த பேரினவாதத்துக்கு இன்னும் தீர்ந்து விடவுமில்லை, குறைந்து விடவுமில்லை. மாறாக மென்மேலும் தனது  வெற்றிவாதப் போக்கைக் கூர்மைப்படுத்தி வருவதை உலகம் அவதானிக்காமலில்லை. தனது சொந்த மக்களைக் கையாள்வதை மட்டுமல்ல, பிராந்திய, பன்னாட்டுச் சமூகத்தைக் கையாள்வதிலும் இந்த மெத்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

யாரும் கேள்வி கேட்கமுடியாத, யாருக்கும் பொறுப்புக் கூறத் தேவையற்ற, சர்வ வல்லமை பொருந்திய ஒரு குடும்ப ஆட்சியாக இன்றையச் சிறிலங்காவின் ஆட்சிபீடம் மாறிக் கொண்டிருக்கிறது. யுத்த வெற்றிவாத அலையில் அள்ளுண்டு போன சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற இக்குடும்ப ஆட்சி தன்னை மென்மேலும் அசைக்க முடியாத சக்தியாக நிறுவும் அனைத்து வழிமுறைகளையும் கைக்கொண்டு வருகின்றது. “ஒரே நாடு – ஒரே சட்டம்“ என்ற கோட்பாட்டின் வழியாக பன்மைத்துவத்துக்கு எதிரான ஒரு நாசகாரப் போக்கை நோக்கி தற்போதைய இலங்கைத்தீவு சென்று கொண்டிருக்கிறது.

மக்கள் போராட்டங்கள் வன்கரம் கொண்டு நசுக்கப்படுகின்றன. இன்னொரு புறத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் இலங்கைத்தீவில் வாழும் அனைவருமே நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். யுத்த வெற்றிவாதக் கனவுகள் கலையும் காலத்தை நோக்கி இலங்கைத்தீவு சென்றாலேயொழிய இலங்கை வாழ் மக்களுக்குச் சுபீட்சமான எதிர்காலம் இல்லை. பொய்மைகளாலும், வன்மத்தாலும் புனையப்பட்ட புராணக் கதையாடல்களிலிருந்து சிங்கள மக்கள் வெளியேறி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் அவலத்தின் இரத்தக்கறைகளுக்கு உங்கள் ஒட்டுமொத்த சந்ததியையும் சொந்தமாக்கப் போகிறீர்களா? தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குரிய நீதியைப் பெறும் போராட்டத்தில் உங்கள் குரல்களையும் இணைத்துக் கொள்ளும்படி சிங்களச் சகோதர மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். தமிழினம் குறித்து ஆதாரமற்ற பயங்களையும் வெறுப்புணர்வையும் விதைக்கும் பேரினவாதச் சக்திகளின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் இருக்கும்படியும் அன்போடு வேண்டுகின்றோம்.

அன்பான மக்களே,

நீண்ட, நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் போர்நிறுத்தங்களை மேற்கொண்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கெடுத்துள்ளோம். எதிரி மேற்கொள்ளும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொண்டும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுக்களுக்குச் சென்றுள்ளோம். அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் பன்னாட்டுச் சக்திகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எப்போதும் நாம் மதிப்பளித்தே வந்துள்ளோம். அவ்வகையில் 2002 ஆம் ஆண்டு நோர்வே தலைமையிலான சமாதான ஏற்பாட்டாளர்களின் துணையோடு சிறிலங்கா அரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொண்டு இறுதிவரை இதய சுத்தியோடு அந்த உடன்படிக்கையை முறிக்காமல் பயணித்தோம்.

ஆனால், ஒருதலைப்பட்சமாக உடன்படிக்கையை முறித்துக்கொண்டு பெரும்போரை தமிழர்மீது கட்டவிழ்த்து விட்ட சிங்கள அரசுமீது பன்னாட்டுச் சமூகம் உரிய அழுத்தத்தையோ நடவடிக்கையையோ மேற்கொள்ளவில்லை. மாறாகப் பல நாடுகள் அந்தக் கொடிய போருக்கு ஆதரவளித்தன. போர் முடிவடைந்த பின்னரும்கூட தமிழர்களின் இனப்பிரச்சனைக்குரிய தீர்வினை உறுதிப்படுத்துவதில் பன்னாட்டுச் சமூகம் தவறி வருகின்றது. இலங்கைத்தீவில் நிகழும் இனப்பிரச்சனையை சிறுகச் சிறுக வலுவிழக்கச் செய்து மயக்கமான, தெளிவற்ற சொல்லாடல்கள் மூலம் ஒரு நிர்வாகப் பிரச்சனையாகவும், மதப்பிரச்சனையாகவும் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையும் தமிழர்களை வேதனையடைச் செய்கின்றது.

உள்நாட்டு விசாரணை, கலப்புப் பொறிமுறை விசாரணை என காலத்துக்குக் காலம் ஒவ்வொரு மனிதவுரிமைக் கூட்டத் தொடரிலும் ஒவ்வொரு பிரேரணைகளை நிறைவேற்றிக் கால இழுத்தடிப்பையே இந்தப் பன்னாட்டுச் சமூகம் செய்து வருகின்றது என்ற விசனம் தமிழர்களிடம் உள்ளது.

மிக வலுவான சாட்சியங்களும் ஆவணங்களும் இருந்தும்கூட கையாலாகாத் தன்மையுடன் இந்தப் பன்னாட்டுச் சமூகம் கைகட்டி நிற்கின்றதோ என்கிற சக்திமிக்க ஒரு கேள்வி எம்மிடமுண்டு. தனியே பொருளாதார நலன்களுக்காகவும் பிராந்திய அதிகாரப் போட்டிக்காகவும் நவீன மானுட வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் கொடுமை குறித்து சர்வதேச சமூகம் பாராமுகமாக இருப்பதை மனச்சான்றுள்ள எவரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இனவழிப்புக்குப் பொறுப்பான ஆட்சியையும் தலைவர்களையும் தப்பவிட்டுக் கொண்டிருக்கும் இதேவேளையில், தமிழர்கள் மீதும், அவர்களின் ஆயுதப்போராட்டத்தைத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் வீண்பழி சுமத்தி அவர்களை முடக்கும் பணியைச் சிலசக்திகள் செய்து கொண்டிருப்பதை நடைமுறை நீதிக்குப் புறம்பான செயலாகவே நாம் பார்க்கின்றோம்.

விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தொடர்ந்து நீடிப்பதையும், அதற்குரிய காரணங்களாக மீளவும் புலிகள் ஆயுதப் போராட்டத்தையோ வேறு சட்டவிரோத செயற்பாடுகளையோ செய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வரம்பு மீறிய பொய்க் கருத்துக்களைப் பரப்புவதையும் ஒரு பொறுப்பற்ற செயலாகவே கருதுகின்றோம்.

2009 மே மாதம் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாள்முதல் எமது இயக்கம் எந்தவொரு ஆயுதம் தாங்கிய நடவடிக்கையிலும் ஈடுபடவில்லையென்பதை அனைவரும் அறிவர்.

எமது மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இயங்குவதற்குரிய வெளியை உறுதிசெய்யும்படி கடந்த பதினொரு ஆண்டுகளாக நாம் தொடர்ந்தும் பன்னாட்டுச் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி, சகலவற்றையும் துறந்து, மக்களின் விடுதலையொன்றே குறிக்கோளாக வரித்துப் போராடிய பல்லாயிரம் போராளிகளைக் கொண்டு பல்லாண்டு காலம் பயணித்த எமது விடுதலை இயக்கத்துக்கு, எமது மக்களுக்காகத் தொடர்ச்சியாக இயங்க வேண்டிய தார்மீகக் கடமையும் உரித்தும் உண்டு. உலகிலேயே உயரொழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் மாண்பை இந்த உலகம் நன்கறியும். ஜனநாயக வெளியில் திறந்த மனத்தோடு எமது மக்களுக்காக இயங்கக்கூடிய ஏதுநிலைகளை உருவாக்கித் தருமாறு அனைத்துலகச் சமூகத்திடம் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

எம்மீதான தடையை நீக்கும்படி நாம் முன்வைக்கும் கோரிக்கை முற்று முழுதாக அறம் சார்ந்தது. அறமற்ற முறையில், வெறும் அரசியல் நலன்களின் அடிப்படையில் போடப்பட்ட எம்மீதான தடையானது இலங்கைத்தீவில் நிகழ்ந்த இனவழிப்புக்கு மிகப்பெருமளவில் காரணமாகியது என்பதை மனச்சான்றுள்ள எவரும் அறிவர். இந்நிலையில், நியாயத்தின் பாற்பட்டு நாம் விடுக்கும் இந்த வேண்டுகோளை உலகநாடுகள் செவிசாய்க்க வேண்டுமென இந்நாளில் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான புலம்பெயர் தமிழீழ மக்களே,

உலகம் தனக்கான வழியே சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும், சக்திகளும் தமக்கான நலன்களின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தேசிய இனங்களின் விடுதலையென்பது பன்னாட்டு ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டதென்பதை நாம் நன்கு அறிவோம். பூகோள அரசியலை அச்சாணியாகக் கொண்டு சுழலும் உலக அரசியலில் எமக்கான விடுதலைப் போராட்டமும் ஒருநாள் இலக்கை அடையுமென்ற நம்பிக்கையில்  தொடர்ந்தும் போராடுவோம்.

பல்தேசிய இனங்களின் மத்தியில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்த்தும் பரப்புரைப் பணிகளை முன்னெடுப்போம். பொதுமக்களிடத்தில் எமக்கான ஆதரவைப் பெருக்குவோம். நீதியின் பாற்பட்ட எமது போராட்டம் உலக மனச்சாட்சியின் துணையோடு ஒருநாள் வெற்றி பெறுமென்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடுவோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து அணிதிரளுமாறு கேட்டுக்கொள்வதோடு – குறிப்பாக, இளையோர்களின் முனைப்பான பங்களிப்பையும் நாம் வேண்டி நிற்கின்றோம்.

அன்பான தமிழகச் சொந்தங்களே,

எமது விடுதலைப் போராட்டத்துக்கான உங்களின் அர்ப்பணிப்போடு கூடிய ஆதரவு அளவிட முடியாதது. போராட்டம் முளைவிட்ட காலத்திலிருந்தே அதற்கு நிழலாகவும் உரமாகவும் இருந்து உறுதுணை புரிந்தீர்கள். இனவுணர்வால் உந்தப்பட்டு நீங்கள் ஆற்றிய பணிகளும் பங்களிப்பும் தொடர்ந்தும் இனிவரும் காலங்களிலும் முனைப்பாக வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளையும் கட்சி வேறுபாடுகளையும் களைந்து ஈழத்தமிழரின் உரிமைக் குரலுக்கு என்றும் உங்கள் ஒத்துழைப்புத் தேவை என்பதை இந்நேரத்தில் மீளவும் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான தாயக உறவுகளே,

மிக நெருக்கடியான காலகட்டத்தில் கொடிய அடக்குமுறை அரசின்கீழ் நீங்கள் அல்லற்படும் வேளையிலும்கூட உரிய வேளைகளில் உங்கள் தமிழ்த்தேசிய எண்ணங்களை வெளிக்காட்டியே வந்திருக்கிறீர்கள். பல்வேறு விடயங்களுக்கும் சளைக்காமல் தொடர்ந்தும் போராடும் உங்கள் ஓர்மம் போற்றுதற்குரியது. “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை“ போராட்டம் மூலமும், இடைவிடாது நடைபெறும் “வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்“ போராட்டம் மூலமும்  தமிழ்த்தேசிய வேணவாவையும் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தையும் உலகின் செவிகளில் ஓங்கி அறைந்து வருகிறீர்கள்.

நம்பிக்கையோடு எமது இனத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்தும் உங்கள் பயணம் வீச்சோடு நடைபெற வேண்டும்.

அன்பான தமிழீழ மக்களே,

எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் எண்ணற்ற சாவுகளையும், அழிவுகளையும், இடைவிடாத துன்பங்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை.

தமது இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய சிற்பிகளான மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும்.

”இலட்சியத்தால் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது” என்ற வரலாற்று நியதிக்கமைய, உலகத் தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில், விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகத் தொடர்ந்தும் போராட உறுதி கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Comments
Loading...