தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மிக் தாக்குதல் விமான கொள்வனவு மோசடி! அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்று உத்தரவு

1468917407_download (5)மிக் தாக்குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட மூல ஆவணம் காணாமல் போனமை சம்பந்தமாக ஸ்ரீலங்கா விமானப்படையின் சட்டப் பணிப்பாளரின் விடயங்களை கேட்டறிந்த கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, எதிர்வரும் 25ஆம் திகதி இது சம்பந்தமாக விபரமான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணமான மிக் விமான கொள்வனவு தொடர்பான மூல ஆவணங்களை சட்ட ரீதியாக எவருடைய பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தது.
அவை சரியான முறையில் வைக்கப்பட்டிருந்தமைக்கான பதிவு சாட்சியங்கள் இருக்கின்றதா?.விமானப்படையின் எந்த அதிகாரியின் பொறுப்பில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிந்து கொண்ட பின்னர், எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்த அறிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆவணத்தின் பிரதியொன்று, குறித்த சம்பவம் தொடர்பாக கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைகளின் போது, விமானப்படையின் பொறியியலாளரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படையின் சட்ட அதிகாரி விங் கொமாண்டர் சட்டத்தரணி திருமதி டயஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் ஆகியோர் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.
இதேவேளை  நான்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை கூட ரத்துச் செய்யப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் உக்ரைன் அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய மிக் விமான கொள்வனவு தொடர்பில் பல இரகசிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் பாவுலோ க்லிம்கினின் அழைப்பின் பேரில் அமைச்சர் மங்கள சமரவீர, உக்ரைனுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார்,
அமைச்சருடன் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...