Designed by Iniyas LTD
மீண்டும் பிரதமராகும் எண்ணம் இல்லை: மன்மோகன் சிங்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பிரதமராகும் எண்ணம் இல்லை என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் இதனை தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்திக்கு அனைத்து தகுதியும் உள்ளது. ஆனால் அந்த முடிவை தக்க நேரம் வாய்க்கும் போது, காங்கிரஸ் கட்சி எடுக்கும். நாட்டை இளைய தலைமுறையினர் வழி நடத்துவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமரான புதிதில் நான் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். என்றும் மக்களுக்கு சேவை செய்வதே என் எண்ணமாக இருந்திருக்கிறது. எனது பதவியை நான் துஷ்பிரயோகம் செய்ததில்லை.
நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை புதிய சீர்திருத்த நடவடிக்கைகளும், திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும். ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. எனது வேலையை நான் மகிழ்ச்சியாக செய்து கொண்டிருக்கிறேன்” என்றார். பதவி விலகுமாறு, தனக்கு காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து எந்த ஒரு நெருக்கடியும் வரவில்லை என்று விளக்கமளித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு:
இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண இரு தரப்பினரும் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார். இலங்கைத் தமிழர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்பது உண்மையில்லை. பல நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களைப் பொருத்தவரை, பல முறை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மோடிக்கு எதிர்ப்பு:
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவிக்கையில், மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும் என்றார்.
பொருளாதாரம் குறித்து பிரதமர்:
பொருளாதாரம் குறித்து பேசுகையில், “கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா உள்பட வளரும் நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வந்தது. ஆனால்,சர்வதேச அளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் பொருளாதாரம் ஏற்றம் பெறும். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே வேளையில், பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை, உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியவில்லை” என்றார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.