தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் இருந்து 400 விசைப்படகுகளில் சுமார் 2500 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.  அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர். அவர்கள் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை எச்சரித்தனர். பலமுறை கூறியும் ஏன் இந்த பகுதிக்கு அடிக்கடி மீன் பிடிக்க வருகிறீர்கள் என்று கூறி மிரட்டினர்.  இதனால் மீனவர்கள் அவசர அவசரமாக கடலில் விரித்து இருந்த வலைகளை எடுக்க தொடங்கினர். அப்போது இலங்கை கடற்படையினர் 20 படகுகளை சுற்றி வளைத்தனர்.fishermen_woves

பின்னர் அவர்கள் படகுகளில் இருந்த மீனவர்களை தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.  மேலும் அவர்கள் சில படகுகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்தெறிந்து நாசப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் விரைந்து கரை திரும்பினர்.  கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

இலங்கை கடற்படையினர் கடந்த 2 மாதத்தில் பலமுறை தமிழக மீனவர்களை தாக்குதல் நடத்தியும், கடத்தியும் சென்றுள்ளனர். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அச்சமடைந்துள்ளனர்.  நேற்று கடலுக்கு செல்ல 600 படகுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் 400 படகுகளில் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதால் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்திய-மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments
Loading...