Designed by Iniyas LTD
மீன்வள விவாதத்தில் சினிமா பாடல் விவாதம்
சட்டசபையில் இன்று மீன்வளம் மற்றும் பால் வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அ.தி.மு.க. உறுப்பினர் ரத்தின சபாபதி பேசும்போது, “45 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி நடித்த படத்தை பார்ப்பதற்காக நாங்கள் காத்து கிடந்தோம். அந்த படத்திலேயே புரட்சித் தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் இப்போது நிறைவேற்றும் திட்டங்களை பாடி இருக்கிறார்கள். 
அந்த பாடலில் இலவச அரிசி, இலவச வீடு பற்றி அவர்கள் பாடி இருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான வரியை தீர்க்க தரிசனமாக பாடினார்கள். ஊதாரி பிள்ளைகளை பெக்க மாட்டோம், அது ஊர் வம்பு வாங்கும்படி வைக்க மாட்டோம் என்பதுதான் அந்த வரிகள். இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து அ.தி.மு.க. உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜு:- இது போன்ற தத்துவ பாடல்கள் புரட்சித்தலைவர் படத்தில்தான் வரும். யாரையும் குறிப்பிட்டு உறுப்பினர் பேசவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- யாரோ எழுதிய பாடலுக்கு அவர் வாய் அசைத்து இருக்கிறார். அவ்வளவுதான். அமைச்சர் ஜெயகுமார்:- எம்.ஜி.ஆர். சொல்லிதான் இது போன்ற தத்துவ பாடல்கள் அவரது படத்துக்காக எழுதப்பட்டது. மு.க.ஸ்டாலின்:- அறிவுரை சொல்லும் பாடல்கள் அந்த படத்தில் மட்டும் வரவில்லை. நிறைய படங்களில் வருகிறது. நாங்களும் இது போன்ற பாடல்களை சொல்லி விவாதிக்க தயார். அவை தலைவர் அனுமதிப்பாரா? இந்த பாடல் இடம் பெற்ற படம் திரைக்கு வரும்போது எம்.ஜி.ஆர். தி.மு.க. பொருளாளராக இருந்தார். நானே நீண்ட தூரம் சைக்கிளில் சென்று 3 முதல் 4 முறை இந்த படத்தை பார்த்து இருக்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.