Designed by Iniyas LTD
முதல்வர் ஜெயலலிதா ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன்
அதிமுக ஆட்சியமைத்ததும் ஊழலை ஒழிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், தியாகராய நகரில் எச்.ராஜா, கோயம்புத்தூர் தெற்கில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் தோல்வியை தழுவினர். அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில், தமிழிசை நிருபர்களிடம் கூறியது:-
முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். பாஜக தோல்வியடைந்த போதிலும், போட்டியிட்ட பெரும்பான்மையான தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றுள்ளது.
குறுகிய கால தேர்தல் தயாரிப்பில் பாஜகவினர் சிறப்பாகச் செயல்பட்டனர். தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஆள்பலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்துள்ளன. ஆகவே, அதிமுக, திமுக கட்சிகள் இனி ஆட்சி அமைப்பது கடினம். பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. பாஜகவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கும் கட்சியின் மக்கள் திட்டங்களை வரவேற்போம்.
அதேபோல், மதுவிலக்கு, ஊழலை ஒழிக்க ஜெயலலிதா விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்றார்.