தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதல் ஆட்டமே தோல்வி – துடுப்பாட்ட வீரர்களை சாடும் டோனி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக இருந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் 47 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது. ‘சூப்பர் 10’ சுற்றின் முதல் ஆட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் 42 பந்தில் 34 ரன்னும், விக்கெட் கீப்பர் ரோஞ்சி 11 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர். அஸ்வின், நெக்ரா, பும்ரா, ஜடேஜா, ரெய்னா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.dhoni

பின்னர் விளையாடிய இந்திய அணி 18.1 ஓவர்களில் 79 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து 47 ரன்னில் வெற்றி பெற்றது. கேப்டன் டோனி அதிகபட்சமாக 30 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்), வீராட் கோலி 23 ரன்னும் எடுத்தனர். எஞ்சிய வீரர்களில் அஸ்வினை தவிர (10 ரன்) மற்றவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள். கான்ட்னெர் 4 விக்கெட்டும், சோதி 3 விக்கெட்டும், நாதன் மெக்குல்லம் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:–

நியூசிலாந்து அணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்திவிட்டதாக நான் நினைத்தேன். ஆனால் பேட்டிங் சொதப்பிவிட்டது. பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்களை அடித்து வெளியேறினார்கள். மிடில் ஒவரில் எந்த ஒரு ஜோடியும் நிலைத்து நிற்கவில்லை. நியூசிலாந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினர். ஆடுகள தன்மையை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 127 ரன் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் எடுக்க முடியாதது அல்ல.பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டனர். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, இது ஒரு சிறந்த வெற்றி. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்தியது மிகவும் முக்கியமானது. 127 ரன் இலக்கு என்பது சவாலானதே என்று எனக்கு தெரியும். விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எங்களது கவனமாக இருந்தது. சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர் என்றார். இந்திய அணி 2–வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 19–ந்தேதி சந்திக்கிறது. முதல் போட்டியில் தோற்றதால் இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. நியூசிலாந்து அணி 2–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 18–ந்தேதி எதிர்க்கொள்கிறது.

Comments
Loading...