தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மும்பையை வீழ்த்தி ஐதராபாத் 7-வது வெற்றி!

ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி ஐதராபாத் அணி பதிலடி கொடுத்தது.

ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்னே எடுக்க முடிந்தது.

கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 45 பந்தில் 67 ரன் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். சித்தார்த் கவூல் 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், ரஷீத்கான், முகமது நபி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் அதிரடி ஆட்டத்தால் எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஷிகார் தவான் 46 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹென்ரிக்ஸ் 35 பந்தில் 44 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர்.

ஐதராபாத் அணி பெற்ற 7-வது வெற்றியாகும். இதன் மூலம் ஏற்கனவே மும்பையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் கூறியதாவது:-

இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லாமே திட்டமிட்டப்படி நடந்தது. பந்து வீச்சாளர்களுக்குதான் பாராட்டு எல்லாம் சேரும். அவர்களது பணி மிகவும் சிறப்பாக இருந்தது.

இதனால் மிக குறைந்த ரன்னை சேஸ் செய்ய முடிந்தது. எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டமும் ‘நாக்அவுட்’ தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் சந்தித்த 3-வது தோல்வியாகும். இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

எங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. 138 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் போதுமான ஸ்கோர் இல்லை. ஐதராபாத் அணியின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்வதை விட 2-வது பேட்டிங் எளிதாக இருந்தது. தவான் சிறப்பாக விளையாடினார். இந்த தோல்வி மூலம் நாங்கள் ஏராளமான பாடம் கற்றுக் கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐதரபாத் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத் லயன்சை 13-ந் தேதி சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 13-வது ஆட்டத்தில் பஞ்சாப்பை 11-ந் தேதி எதிர் கொள்கிறது.

Comments
Loading...