Designed by Iniyas LTD
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் சாமுவேல் பத்ரி!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. இந்த மைதானத்தில் சேஸிங்கில் 143 ரன்கள் என்பது எளிதானது என்பதால், அதிக நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
முதல் ஓவரை சாமுவேல் பத்ரி வீசினார். இந்த ஒவரில் மும்பை அணி 4 ரன்கள் எடுத்தது. 2-வது ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். பட்லர் 5 பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். 2-வது ஓவர் முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்தது.

ரோகித் சர்மா க்ளீன் போல்டாகிய காட்சி
3-வது ஓவரை சாமுவேல் பத்ரி வீசினார். இந்த ஓவரில் மும்பை அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது பந்தில் பார்த்தீவ் பட்டேல் கெய்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்தில் மெக்கிளேனகன் மந்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தினால் ஹாட்ரிக் சாதனைப் படைக்கலாம் என்ற நோக்கத்தில் பத்ரி பந்து வீச, ரோகித் சர்மா அதை எதிர்கொண்டார். ஹூக்ளியாக வீசிய அந்த பந்து, ரோகித் சர்மாவின் பேட்டிற்கும், பேடிக்கும் இடையில் சென்று ஸ்டம்பை தாக்கியது. இதனால் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

மெக்கிளெனகன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் மந்தீப் சிங்
பவர்பிளேயான 6 ஓவருக்குள் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசிய பத்ரி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.