Designed by Iniyas LTD
முல்லைத் தீவில் மக்களின் காணிகளை சிங்களவருக்கு வழங்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் 1500 ஏக்கர் காணிகளை மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு மாகாண காணி ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி யுத்தகாலத்தில் தமது காணிகளை அல்லது ஆவணங்களை இழந்த மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்கான 2 வருட வேலைத்திட்டத்தின் இறுதிமாத முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழர்களுக்கு பாதகமான இரண்டு முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தன் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக கரைதுறைப்பற்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான 1500 ஏக்கர் வயல் காணிகள் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்காணிகளுக்காக 1980 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுக்கு ஆதாரமாக காணி உத்தரவுப்பத்திரத்தை வைத்திருக்கின்றனர்.
அக்காணிகளை மீட்டுத்தருமாறு கோரி சுமார் 600 குடும்பங்கள் தமது காணிப்பிரச்சனை தொடர்பாக விண்ணப்பித்திருக்கின்றனர். இதற்கு எதுவித தீர்வும் அம்மக்களிற்கு பெற்றுக்கொடுக்கப்படாமல் குறித்த பிரச்சனை தீர்வுகாணப்பட்டதாக அறிக்கையை மாற்றியமைக்க வட மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தன் பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்றவர்களாக பதிவு செய்த 3000 தமிழ்மக்களின் பிரச்சனைக்கும் தீர்வுகாணப்பட்டதாக அறிக்கையை மாற்றியமைக்கவும் இவரால் சகல பிரதேச செயலாளர்களிற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் அனைத்து அறிக்கைகளும் இவ்வருட இறுதியில் காணி அமைச்சால் ஜக்கிய நாடுகள் சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.