Designed by Iniyas LTD
முள்ளியவளைப் பொதுச்சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம். பிரச்சினை சமூகமாக தீர்க்கப்பட்டது….
முல்லைத்தீவு – முள்ளியவளை, பொதுச் சந்தை ஊழியர்கள் பூரண கடையடைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சந்தையில் வியாபார பட்டறை, அனுமதி வழங்கலில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்தே, வியாபாரிகள் இவ்வாறு கடையடைப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் பிரதேசசபை உறுப்பினர்களது தலையீட்டுடன் பிரச்சினை சுமூகமாகத் தீர்கப்பட்டது. இது குறித்து சந்தை குத்தகைதாரர் பா.அஜந்தன் கருத்துத் தெரிவிக்கும்போது,
இரண்டுபேர் கூட்டாகச் சேர்ந்து மீன் பட்டறை ஒன்றினை நடாத்தி வந்ததாகவும், அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், இந் நிலையில் கடந்த எட்டு மாத காலமாக வேறு ஒருவரே தொடர்சியாக பட்டறையை நடாத்தி, சந்தைக்கு வரியும் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும் தற்போது இறந்தவருடைய மருமகன், தான் பட்டறையை நடாத்த போவதாக கூறிய அதேவேளை, ஒருமுறை பிரதேசசபை ஊழியர்களுடைய ஆதரவுடன் சந்தைக்கு வந்து தன்னை தகாத வாரத்தைகளால் பேசி சென்றதாகவும் சந்தைக் குத்தகைதார் தெரிவித்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் கலந்துரையாட, பட்டறை நடாத்துபவரையும், இறந்தவருடைய மருமகனையும் பிரதேசசபை தவிசாளர் அழைத்ததாகவும், பின்னர் பட்டறை நாடத்துபவர் இனிமேல் நடாத்தக்கூடாதெனவும், இறந்தவருடைய மருமகனுக்கே பட்டறை சொந்தமெனவும் கடிதம் எழுதி கையெழுத்து வாங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சந்தைக் குத்தகைதாரர்,
கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர், பிரதேசசபை ஊழியர்களுடைய கருத்தினை மாத்திரம் கருத்தில் எடுத்து முடிவெடுத்ததாகவும், குறித்த வட்டாரத்திற்குரிய, பிரதேசசபை உறுப்பினர்களையோ, அல்லது, சந்தையின் குத்தகைதாரரான தன்னையோ, வியாபாரிகள் சங்கத்தினரையோ அழைத்து பிரச்சினை தொடர்பில் ஏதும் கலந்துரையாடவில்லை. எனவேதான் வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் தி.ரவீந்திரன், மற்றும் உறுப்பினர்களான சி.லோகேசுவரன், க.விஜிந்தன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடி, இருவருடைய வாழ்வாதாரமும் பாதிக்காத வண்ணம் இருவரும் சந்தையில் வியாபாரம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டதுடன் பிரச்சினை சுமூகமாக தீர்கப்பட்டது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலரும் தவிசாளருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்திருந்தபோதும் அவர் அழைப்புக்களை எடுக்கவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
இது தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.தவராசா அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது.
சட்ட ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டே தாங்கள் கடமைகளைச் செய்வதாகவும், சட்டத்தின்படி இறந்தவருடைய மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்குத்தான் பட்டறை உரித்துடையது எனவும் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறன கடையடைப்பு ஆர்ப்பாட்டங்களை அவர்கள் செய்வார்களானால் அது சட்டத்திற்கு முரணானது என்று தெரிவித்ததுடன், சந்தைக் குத்தகைதாரர் அடாவடித்தனமாக நடந்துகொண்டால் தன்னால் அவரை அதிலிருந்து நீக்கவும் முடியும் எனவும் தெரிவித்தார்.