Designed by Iniyas LTD
முள்ளிவாய்காலில் ஒரு மருத்துவப் போராளியின் இறுதி நாட்கள் – மிகுதி நாட்கள் 4
தாய் தமிழகத்தில் இருந்து மருந்துகளையாவது அனுப்பி இருக்கலாம். தமிழர்களுக்காக அல்ல. மனிதர்களுக்காக. ஆனால் தமிழக அரசியல் வாதிகள் இன உணர்வு என்பதை வெறும் பேச்சிலேயே காட்டினார்கள்.
இது தினமும் நடக்கும் அவலம். அன்று இப்படி பல உயிர்களை காப்பாற்ற முடியாத குற்ற உணர்வு என்னை இன்னமும் கொல்லுகிறது. இது எனக்கு மட்டுமல்ல களத்தில் இருந்த ஒவ்வொரு மருத்துவ போராளிக்கும், மருத்துவர்களுக்கும் அப்படித்தான். நாங்கள் பல வழிகளில் மயக்க மருந்துகளையும் ஏனைய அத்தியாவசிய மருந்துகளையும் பெறுவதற்கு முயற்சி செய்தோம். ஆனால் பலனளிக்கவில்லை.
இப்படி எம் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டு இருக்க தமிழீழ காவல்துறையால் கைதாகி சிறையில் இருந்த ஒரு ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரி காயமடைந்து மருத்துவர் சிவபாலன் மற்றும் பல போராளி மருத்துவர்களும் அவரைக்காப்பாற்ற மூன்று மணி நேரம் அறுவைச்சிகிச்சை செய்தார்கள். இதெல்லாம் ஸ்ரீலங்கா அரச படைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யுத்த களத்தில் காயமடைபவர்கள் எதிரிகளாக இருந்தாலும் மனிதர்காளாகவே பார்க்கப்படுவர். முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்திருந்த பல இராணுவ வீரர்கள் யுத்தம் முடிவுறும் போது புலிகளால் கொல்லப்படவில்லை. மக்களோடு மக்களாக அவர்களும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் யுத்த களத்தில் காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த பல நூறு போராளிகளும் மக்களும் தற்காலிக மருத்துவ மனையில் வைத்து ஸ்ரீலங்கா அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு சாட்சியாக காயத்தினால் நடக்க முடியாமல் அங்கிருந்து கைகளால் தவண்டு வந்த இன்றும் உயிருடன் இருக்கும் போராளிகளும் சாட்சிகளாக உள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் பல உயிர்கள் செத்துக்கொண்டிருப்பதை உலகமே பார்த்துக்கொண்டுதான் இருந்தது. தாய் தமிழகத்தில் இருந்து மருந்துகளையாவது அனுப்பி இருக்கலாம். தமிழர்களுக்காக அல்ல. மனிதர்களுக்காக. ஆனால் தமிழக அரசியல் வாதிகள் இன உணர்வு என்பதை வெறும் பேச்சிலேயே காட்டினார்கள்.அன்று அவர்கள் எமக்கு எப்பாடுபட்டாவது மருந்துகள் அனுப்பி இருந்தால் இன்று பல்லாயிரம் தமிழர்கள் தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் வாழ்வார்கள்.
எம்மால் முடிந்தவரை எல்லா வழிகளிலும் மயக்க மருந்து எடுக்க முயற்சித்தோம். உண்மையில் நாங்கள் செய்த பெரிய தவறு..மயக்க மருந்துகளை கூடுதலாக சேமிக்காதது தான். ஏனெனில் போராளிகளும் சரி மக்களும் சரி அனைவரும் முள்ளிவாய்க்காலில் அழிவதை கற்பனையிலும் நினைக்க வில்லை.
மாத்தளன் மருத்துவமனையில் இட வசதி போதாத காரணத்தினால் அதிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் இன்னுமொரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு அங்கு வைத்து காயமடைந்த மக்களுக்கு சிகிசையளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
நான் தினமும் எல்லா மருத்துவ மனைகளுக்கும் சென்று தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய கடமையில் இருந்தேன். அன்றும் அந்த மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியிருந்த ஆனந்தபுரம் பகுதியிலிருந்து எறிகணை ஒன்று ஏவப்பட்டது. அது அருகிலிருந்த வீட்டினை துளைத்துக்கொண்டு விறகு வெட்டிக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் இடது காலினை உடைத்துக்கொண்டு சென்று கிணற்றில் குளித்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையினை துளைத்து சென்றது.
இந்த குண்டு மட்டும் அன்று நான்கு உயிர்களை பலி கொண்டது. அந்த பெண்ணின் குழந்தையும் அருகில் இருந்ததால் தாயின் மூளை சிதைந்து அந்த குழந்தையின் உடலில் பட்டிருந்தது. தாயின் முகம் பார்க்கமுடியாத வாறு கோரமாக சிதைந்து காணப்பட்டது. அந்த தாயின் பிள்ளைக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். அந்த பிஞ்சுக்குழந்தைக்கு வாழ்வில் மறக்க முடியாத காட்சி அது. தன் கண் முன்னாலேயே தாய் முகம் சிதைந்து இறந்து கிடப்பதை எந்த மனித உயிராலும் மறக்க முடியாது.
மிகுதி நாட்கள் தொடரும்..



