Designed by Iniyas LTD
முள்ளிவாய்காலில் ஒரு மருத்துவப் போராளியின் இறுதி நாட்கள் – மிகுதி நாட்கள் 3
தற்காலிக மருத்துவமனையில் நடக்க முடியாமல் படுக்கையில் இருந்த பல நூறு மக்கள் இராணுவத்தால் சுட்டுகொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் காயமடைந்த போராளிகளையும் மக்களையும் பாதுகாப்பான இடத்துக்கு தூக்கிச்செல்ல ஆட்கள் இல்லை. மக்களும் என்ன செய்வார்கள். அவர்களது குடும்பம்தான் அவர்களது உயிர்.
எங்களை விட்டுட்டு போகவேண்டம் என்று பலர் கதறி அழுதது இன்றும் என் கண்ணுக்குள் நிக்கிறது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு உதவியாக வயிற்றில் காயமடைந்து நடக்ககூடியதாக இருந்த நிலவன் எனும் ஒரு போராளி மட்டும் தான். முள்ளிவாய்க்காலின் ஒரு புளியம் மரத்துக்கு அருகில் இருந்த தற்காலிக மருத்துவ மனையில் காயமடைந்த மக்கள் போராளிகள் என நூறுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அவர்களால் எழுந்து நடக்ககூட முடியாது. அவர்களை வட்டுவாகல் பாலம் நோக்கி நகர்த்துவதற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகளில் பலர் காயமடைந்து விட்டனர். அப்படியிருக்க நான் யாரை உதவிக்கு அழைப்பது? செய்வதறியாது நின்றேன். இறுதியாக அந்த தற்காலிக மருத்துவ மனையில் ஒரு வெள்ளைக்கொடி உயர்த்தி விட்டு எனக்கு உதவியாக இருந்த அந்த போராளியை அங்கு அவர்களுக்கு உதவ விட்டு விட்டு நான் வட்டுவாகல் பாலம் நோக்கி வந்தேன்.
பாலத்துக்கு முன்னால் உள்ள ஒரு வெளிப்பிரதேசத்தில் இடுப்பின் கீழ் இயங்காதவர்கள் மற்றும் காயமடைந்த போராளிகள் மக்கள் என அனைவரும் ஒன்றாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பார்த்துவிட்டு தற்காலிக மருத்துவமனை நோக்கி வந்த போது தற்காலிக மருத்துவமனை இருந்த அனைத்து இடங்களும் இராணுவம் கைப்பற்றியது. தற்காலிக மருத்துவ மனையில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் தங்களது கைகளால் தவன்று வட்டுவாகல் பாலம் நோக்கி சென்றுள்ளனர்.ஏனையவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் . புலம்பெயர் நாட்டுக்கு தப்பி வந்த ஒரு முன்னாள் போராளி ஊடாக அறிந்தேன்.
என் வார்த்தைகளை நம்பி நூறுக்கும் மேற்பட்ட இடுப்பின் கீழ் இயங்காது இருந்த ஆண் பெண் போராளிகள் மக்களோடு மக்களாக இரானுவப்பிரதேசதுக்கு செல்ல சம்மதித்தனர். அவர்களை பார்க்கவே நான் அங்கு சென்றேன். அவர்களில் இருவரை வீல்செயர் இல்லாத காரணத்தால் பின்னோக்கி நகர்த்த முடியவில்லை. அவர்களும் கொல்லப்பட்டனர். சண்டை உக்கிரமடைந்ததால் வட்டுவாகலில் இருந்து மீண்டும் அந்தப்பகுதிக்கு செல்ல முடியவில்லை.
வீதியின் இரு புறமும் குண்டுகள் வீழ்ந்து வெடித்திக்கொண்டிருக்க துப்பாக்கியின் ரவைகள் செல்லும் சத்தம் காதைக்கிலித்துக்கொன்டிருக்க மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நிலத்தோடு படுத்திருந்தார்கள். வீதியில் யாரும் அப்போது நடக்க முடியவில்லை. ஏனெனில் ரவைகள் நடப்பவர்களின் தலைகளை பதம் பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு போராளி பச்சை நிற சீருடை அணிந்திருந்தார். இரு கண்களிலும் கட்டு போடப்பட்டிருந்தது. அவருக்கு கண் பார்வை இல்லை. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தடவிப்பார்த்து தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவரது உடலில் பல இடங்களில் காயங்கள்..ஆனால் வலியை உணர்ந்தவறாக தெரியவில்லை. அமைதியாக தனியாக வந்து கொண்டிருந்தார். நான் ஓடிச்சென்று அவரை பிடித்து ஒரு பதுங்கு குழிக்குள் படுக்க வைத்தேன். நான் அவரைப்பார்த்து உங்களுக்கு வலி நிவாரணி (Pain Killer) ஏதும் தரட்டுமா? என கேட்டேன்..ஆனால் அவர் பதில் எதுவும் கூறாமல் மெல்லிய சிரிப்பு மட்டும் தான். நான் அவரை பிடித்து கூட்டிச்சென்று ஒரு பனை மரத்துக்கு அருகில் இருந்த பதுங்குக்குழியில் படுத்தி விட்டு ஒரு தாதியை அழைத்து அவருக்கு முதலுதவி செய்து நாளத்திரவம் ஏற்றசொன்னேன். அந்த இடம் அன்று மாலை இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த உயிருடன் மீண்டார்களா என தெரியவில்லை.
மிகுதி நாட்கள் தொடரும்..


