தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முஸ்லிம் தமிழ் ஒற்றுமை வளர்க்கப்படவேண்டும் – பா. டெனிஸ்வரன்

மன்னார் முசலி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பொற்கேணிக் கிராமத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அங்குள்ள பள்ளிவாசலில் மௌலவி அவர்களையும் ஊர் தலைவர்கள், பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.denisvaran

இந்த சந்திப்பின் போது அமைச்சர், முஸ்லிம் தமிழ் ஒற்றுமை வளர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன், தனி நபர்களுக்குள் பிரச்சினைகள் எழும்போது அது தனி நபர் சார்ந்த பிரச்சினைகளாகவே பார்க்கப்படவேண்டும் என்றும் ஒரு போதும் அவற்றை இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்றாது மதத் தலைவர்களும், புத்திஜீவிகளும், ஊர் பெரியவர்களும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு நாம் அவற்றை அடியோடு ஒளிக்கவில்லைஎன்றால் நமது தமிழ் பேசும் சமூகம் எதிர்காலத்தில் ஓர் நிலையான அபிவிருத்தியை எப்போதும் அடைய முடியாத நிலையும் சந்தோஷமற்ற வாழ்க்கையுமே மீதமாக இருக்குமென்றும் தெரிவித்தார்.

ஆகவே நாம் தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைந்து செயற்ப்பட்டு ஓர் நிலையான அபிவிருத்தியை நோக்கி நகரவேண்டுமென்றும், அதனூடாக நமது உரிமைகளை வேன்றேடுக்கவேண்டுமென்றும் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்தப் பகுதியின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பாக அங்குள்ள பல வீதிகள் புனரமைக்க வேண்டிய தேவைகள் தொடர்பாகவும், பாடசாலையை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகவும், புதிய மைதானம் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

மேலும் இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் குறிப்பாக கௌரவ மாகாண சபை உறுப்பினர்களான ரிப்க்கான் பதியுதீன் மற்றும் அயூப் அஸ்மின் அவர்களது கோரிக்கைக்கு அமைவாகவும் அங்குள்ள மக்களது கோரிக்கைக்கு அமைவாகவும் பொற்கேணியில் இருந்து பண்டாரவெளி செல்லும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான வீதியை புனரமைக்க இந்த ஆண்டு 11 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கித்தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். மேலும் மேற்ப்படி அமைச்சர் கடந்த வருடம் வரவு செலவுத் திட்டத்தின் போது ஆளும் தரப்பு எதிர் தரப்பு என்ற பேதமோ, கட்சி பேதங்களோ இல்லாமல் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உட்பட 38 உறுப்பினர்களுக்கு தத்தமது பகுதிகளில் இருக்கும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான வீதிகளை புனரமைப்பதற்கு  தலா 6 மில்லியன் ரூபா  நிதியை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், மாகாணத்தில் இருக்கின்ற பல கிராமங்களுக்கு தனது அமைச்சினூடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்றிருப்பதாகவும், அதேபோல் இன்னும் பல கிராமங்களுக்கு பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவையுள்ளதாகவும், தேவைகளை அறிந்து முன்னுரிமையடிப்படையில் தம்மால் பல அபிவிருத்திப்பணிகள்  முன்னெடுத்துச் செல்லப்படுமென்றும் தெரிவித்துள்ளார். அதே சந்தர்ப்பத்தில் மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் ஒத்துழைப்புத்தந்தால் பின்தங்கிய கிராமங்களை மிக விரைவாக அபிவிருத்தி செய்யமுடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தன்னைப் பொறுத்தமட்டில் தனது மக்கள் கேட்காமல் தேவை அறிந்து சேவையாற்றவேண்டும் என்ற உன்னத நோக்கோடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் பாடசாலை தரமுயர்த்துதல், உள்ளக வீதிகள் மற்றும் மைதானம் அமைத்தல் போன்ற விடயங்கள் புதிதாக குடியேறிய மக்களுக்கு உடனடியாக பூரணப்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஏனைய அமைச்சர்களும் அதிகாரிகளும் மேற்ப்படி விடயத்தில் கரிசனை எடுத்து தீர்த்துக் கொடுக்கவேண்டுமென்றும் அவ்வாறு தீர்க்கப்படும் பட்சத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றும் தெரிவித்திருக்கின்றார். அத்தோடு அக்கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அவர்களது கட்டிட திருத்தவேலைக்கு இந்த ஆண்டு 2 இலட்சம் ரூபாய் நிதியை தாம் ஒதுக்கித்தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் ஒற்றுமையோடு இருந்து வழமான மாகாணத்தைக் கட்டி எழுப்புவதோடு, எமது அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கு  ஒற்றுமையை நிலைநிறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments
Loading...