Designed by Iniyas LTD
மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பு – பீகார் மாநில அரசு
காட்டில் வாழும் ஐந்தறிவு படைத்த கொடிய மிருகங்கள் கூட தங்களின் இனத்தை சேர்ந்த இதர மிருகங்களை காயப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ விரும்புவதில்லை. ஆனால், ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்று தற்பெருமை பேசி வரும் மனித குலத்தை சேர்ந்த நாம் மட்டும் தான் நம்மில் ஒரு பிரிவினரை குறைந்தபட்சம் 100 அடையாள பெயர்களால் அழைத்து, தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரையும் குத்தி மனித சமுதாயத்தை விட்டு காலகாலமாக விலக்கியே வைத்துள்ளோம்.
பூர்வ ஜென்ம விதிப்பலனாகவும், ‘க்ரோமோசோம்’களின் குளறுபடியினால் விளைந்த (எதிர்) வினைப்பயனாகவும் மூன்றாம் பாலின மனிதப்பிறவிகளாக இந்த பூமியில் பிறந்து விட்ட திருநங்கையர்கள், உலகம் முழுவதும் மக்களால் புறக்கணிக்கப்படுவதுடன், அற்ப புழுக்களாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
தாங்கள் செய்தறியாத தவறுக்கு தேவையற்ற தண்டனையை அனுபவித்து வரும் திருநங்கையர்கள், காலகாலமாக அடைந்து வரும் வேதனையும், அனுபவித்து வரும் இன்னல்களும் சொல்லில் அடங்காத-சொன்னால் விளங்காத-சொல்லி, விளங்கிய பின்னரும், யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத துயர தொடர்கதை என்றால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு அல்ல.
இந்நிலையில், திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, பீகார் மாநில அரசு அறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இனி மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பில் மூன்றாம் பாலின மக்களாக திருநங்கையர்கள் இணைக்கப்படுவார்கள் எனவும், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் திருநங்கையர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்டியல் இரண்டில் இடம்பெற்றுள்ள பிறபடுத்தப்பட்ட வகுப்பினராக இவர்கள் அறியப்படுவார்கள் என்றும் பீகார் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.