Designed by Iniyas LTD
மேனி பாகியோ, மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளில் களமிறங்க உள்ளார்
ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் குத்துச்சண்டை வீரரான மேனி பாகியோ, மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளில் களமிறங்க உள்ளார். 37 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான மேனி பாகியோ, அரசியலில் ஈடுபட்டு வருவதால் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து விதமான குத்துச்சண்டைப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மேனி பாகியோ, குத்துச்சண்டையை தான் மிகவும் விரும்புவதால் போட்டிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள குத்துச்சண்டைப் போட்டியில், 27 வயதான அமெரிக்க குத்துச்சண்டை சாம்பியன் ஜெஸ்சி வார்கஸ் உடன் மோத உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 66 போட்டியிகளில் பங்கேற்றுள்ள பாகியோ, 58 வெற்றிகளைப் பெற்றுள்ளார். வெவ்வேறு எடைப்பிரிவுகளில் 8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒரே குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையைப் பெற்றவராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக குத்துச்சண்டை ஜாம்பவான் மே வெதருடன் 2015ஆம் ஆண்டில் போட்டி ஒன்றில் மோதி தோற்றவர் பாகியோ என்பது நினைவுகூறத்தக்கது.