Designed by Iniyas LTD
மைத்திரி அரசு முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டது!
முஸ்லிம் சமூகத்தின் பறிபோன காணிகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்கப்பட்டு வழங்கப்படும் என முஸ்லிம் சமூகம் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த போதும் அது இதுவரையும் நிறைவேற்றப்படாமல் உள்ளமை ஏமாற்றமளிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வு அண்மையில் நடைபெற்றது. அவ்வமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர். ஆர்.எம். அன்வரினால் புல்மோட்டை பிரதேசத்தில் பொதுமக்களின் காணிகளை படையினரிடமிருந்து விடுவிக்கக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட அவசரப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
நமது நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கு பங்களிப்பு செய்த தமிழ் சமூகம் விழிப்புடன் செயற்பட்டு தங்களின் அரசியல் பேரம் பேசும் நிலைமையை பயன்படுத்தி தமது சமூகம் இழந்தவைகளைப் பெற்று வருகின்றது. இது குறித்து முஸ்லிம் சமூகம் மகிழ்ச்சியடைகின்றது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருவதை நாம் பாராட்டுகின்றோம். கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக பதவி வகித்த முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க நமது கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு முடிந்தளவு நல்ல தீர்வுகளை வழங்கினார்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த விமலவீர திஸாநாயக்க இன பேதமின்றி செயற்பட்டார். நீண்ட காலமாக புல்மோட்டை பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான காணிகளை சிலர் அத்துமீறி பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்த நடவடிக்கைகளை எதிர்த்து புல்மோட்டை பிரதேசமக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையினருக்கு தேவையான காணிகளை நாம் வழங்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு நலன் கருதிதான் பாதுகாப்பு படையினர் உள்ளனர். புல்மோட்டை பாதுகாப்பு படையினருக்கு சுமார் 180 ஏக்கர் காணியுள்ளதாக இச் சபையில் சுட்டிக் காட்டப்பட்டது. பாதுகாப்பு படையினருக்கு அவசியமாக தேவைப்படும் காணிகளை வழங்கி விட்டு மீதிக் காணிகளை இப் பிரதேச முஸ்லிம், தமிழ், சிங்கள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வீடமைப்புத்திட்டம் அமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபையும், மாகாண காணி அமைச்சரும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பதவியில் இருந்த போது கிழக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இச் சபையில் மக்கள் பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்ட விடயங்களைக் கேட்டுள்ளார். அவர் தனக்கு அரசாங்கக் காணி ஒரு அங்குலம் கூட வழங்கப்படவில்லை என இச் சபையில் அன்று கவலையோடு தெரிவித்தார். இப்போது கிழக்கு மாகாண காணி அமைச்சர் பதவி ஆரியவதி கலபதிக்கு கிடைத்துள்ளது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். குறிப்பாக திருகோணமலை மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த 520 ஏக்கர் விவசாயக் காணி விடுவிப்பு தொடர்பான அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் காணிகளை விடுவிப்பதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதும் இது நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளன. அரச அதிபர்களினாலும், காணி அதிகாரிகளினாலும் பல கூட்டங்கள் நடத்தப் பட்டும் முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான இக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளன. இது குறித்து இப் பிரதேச மக்கள் நீண்ட காலமாக பெரும் அதிருப்தியுடன் உள்ளனர்.இந்த விடயத்தில் மாகாண காணி அமைச்சர் திருமதி ஆரியவதி கலப்பதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் இறுதி வருடத்தில் சென்று கொண்டிருக்கின்றன. எனவே, அமைச்சர்கள் வேகமாக செயற்பட்டு கிழக்கு மாகாண மக்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள் எனவும் தெரிவித்தார்.