Designed by Iniyas LTD
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…
தற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும் காணப்படுகின்றார்கள் என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னனியில் மல்லாகம் சகாயா மாதா தேவாலயத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற குழப்பமான நிலையின் போது உண்மையான குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பளித்து விட்டுக் குழப்பம் இடம்பெற்ற பகுதியில் நின்றமைக்காக அப்பாவி இளைஞனைச் சுட்டுப் படுகொலை செய்தமை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத, வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் பகுதிகளில் பொலிஸார் பொறுப்பற்ற விதமாக அப்பாவிகளைக் குறிவைத்துக் கொலை செய்கின்ற சம்பவங்கள் இது முதற்தடவையல்ல. என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மூன்றுபேரைக் கைது செய்து அவர்களை மாவீரர் தினத்துடன் சம்பந்தப்படுத்தி விசாரணை மேற்கொண்ட பின்னர் திருட்டு வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகப் பொய்வழக்குப் பதிவு செய்து திருட்டுப் போன பொருட்களைப் பிடிப்பதற்காகத் தாம் அவர்களைத் துரத்திச் சென்ற போது தப்பியோடி கோணாவில் குளத்தில் விழுந்து இறந்ததாகப் பொய்யானதொரு சோடிப்பைச் சுன்னாகம் பொலிஸ் மேற்கொண்டதையும் அவர் இதன் போது நினைவுகூர்ந்துள்ளார்.
அதன் பின்னர் சட்டத்தரணி மணிவண்ணனால் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
மேலும் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுப் பல நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நீதி எதுவும் கிட்டாதது தொடர்பிலும் அவர் வருத்தம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
