Designed by Iniyas LTD
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு
அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளையும், மீண்டும் வவுனியாவுக்கு மாற்ற வலியுறுத்தி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுமுன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் போது, எதிர்வரும் 25ஆம் நாளுக்குள் இந்த விடயத்துக்குத் தீர்வு காண்பதாக சிறிலங்கா அதிபர் உறுதியளித்திருந்தார்.
சிறிலங்கா அதிபரின் உறுதிமொழி தொடர்பாக ஆராய்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், அதில் திருப்தியடையாத நிலையில், நேற்று முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறிலங்கா அதிபர் குறிப்பிட்ட காலக்கெடுவான வரும் 25ஆம் நாள் வரை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 25ஆம் நாளுக்குப் பின்னரும் சிறிலங்கா அதிபரின் வாக்குறுதி நிறைவேற்றப்படாவிடின், போராட்டத்தை விரிவுபடுத்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தினால், நேற்று ஆரம்பமாவதாக இருந்த நான்காவது ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை பல்கலைக்கழக நிர்வாகம் பிற்போட்டுள்ளது.