Designed by Iniyas LTD
யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்
யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் அப்போது கடமையில் இருந்த அரச உத்தியோகத்தர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சேகுவேராவின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்.பொது நூலகத்துக்கு நேற்று முன்தினம் நூல்கள் வழங்கிய பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சகோதரன் சேகுவேராவின் நினைவு தினமான இன்று சோசலிஸ இளைஞர் சங்கத்தால் அவரது நினைவு தினத்தை யாழப்பாணத்தில் கொண்டாடத் தீர்மானித்துள்ளோம். அதன் ஒரு கட்டமாக சோசலிஸ இளைஞர் சங்கத்தின் அங்கத்தவர்களால் வெவ்வேறு விதமாக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு யாழ். பொது நூலகத்துக்கு சில வகையான புத்தகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
சேகுவேரா ஒரு படித்த வைத்தியன், அவர் போராட்டக் காலங்களில் பையில் புத்தகங்களை வைத்து வாசித்துக் கொண்டிருப்பார். அவரின் நினைவு தினமான இன்று யாழ். நூலகத்துக்கு புத்தகங்கள் கையளிப்பது பொருத்தமானது என நினைத்தோம்.
யாழ்.பொது நூலகம் என்று கூறும் போது எமக்கு துக்கம் ஏற்படுகின்றது. 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்த நூலகம் எரித்து அழிக்கப்பட்டது.அதில் 90 ஆயிரம் புத்தகங்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட புத்தகங்களின் துக்கத்தை மறப்பதற்கு நாங்கள் வழங்கும் புத்தகங்களும் சிறிய உதவியாக இருக்கும் என நம்புகின்றோம்.
நூல் நிலையத்துக்கு தீயிட்டு எரிக்கும்போது, முக்கிய சாட்சிகளாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் அரச கடமையில் ஈடுபட்டிருந்த சிங்கள அரச உத்தியோகத்தர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.
இந்தத் தீ எரிப்புச் சம்பவத்துடன் அப்போதைய ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரச அமைச்சர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டிருந்தனர் என நாங்கள் அறிந்துள்ளோம். எமது நாட்டில் இன, மத செயற்பாடுகள் சமமாக போற்றப்படுகின்ற ஒரு நிலையமாக யாழ்ப்பாணம் நூல் நிலையம் அமைகின்றது என்றார்.