தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யூரோ கோப்பை: போலந்தை பெனால்டியில் வீழ்த்தி அரையிறுதியில் போர்ச்சுக்கல்!

portugalயூரோ கோப்பை கால்பந்து போட்டியில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்.

அந்த அணி தனது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தைத் தோற்கடித்தது. இந்த யூரோ கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணி, ஓர் ஆட்டத்தில்கூட ஆட்டநேரத்தில் (90 நிமிடங்களில்) வென்றதில்லை. கடைசி 5 யூரோ கோப்பை போட்டிகளில் 4-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் போர்ச்சுகல், அடுத்ததாக பெல்ஜியம் அல்லது வேல்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போலந்து கேப்டனும், முன்னணி ஸ்டிரைக்கருமான லிவான்டோவ்ஸ்கி கோலடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதனால் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி கடும் நெருக்கடிக்கு உள்ளானது.

இதையடுத்து கோலடிப்பதில் தீவிரம் காட்டியது போர்ச்சுகல். 31-ஆவது நிமிடத்தில் போலந்தின் மைக்கேல் பாஸ்டான், ரொனால்டோவை கீழே தள்ளிவிட்டார். இதையடுத்து நடுவரிடம் ரொனால்டோ பெனால்டி கிக் வாய்ப்பளிக்குமாறு கேட்டார். தொலைக்காட்சி ரீபிளேயில் ரொனால்டோவை பாஸ்டான் கீழே தள்ளியது தெளிவாக தெரிந்தபோதும், நடுவர் பெனால்டி கொடுக்கவில்லை. இதனால் போர்ச்சுகல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

33-ஆவது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து நானி கொடுத்த கிராûஸ சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரெனாட்டோ சான்செஸ், அதிரடியாக கோலடிக்க, ஸ்கோரை சமன் செய்தது போர்ச்சுகல். இதன்பிறகு நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 85-ஆவது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரொனால்டோ இடது காலால் அடித்த பந்து, துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி செல்லாததால் அந்த வாய்ப்பு வீணானது.

இதையடுத்து ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் வாய்ப்புகளில் இரு அணிகளின் கேப்டன்களான லிவான்டோவ்ஸ்கி, ரொனால்டோ ஆகியோர் துல்லியமாக கோலடித்தனர். 3 வாய்ப்புகள் வரை இரு அணிகளும் சரியாக கோலடித்தன. ஆனால் 4-ஆவது வாய்ப்பில் போலந்தின் பிளாஸிகோவ்ஸ்கியின் கோல் வாய்ப்பை போர்ச்சுகல் கோல் கீப்பர் ராய் பாட்ரிஸியோ முறியடிக்க, போலந்துக்கு சிக்கல் ஏற்பட்டது. 5-ஆவது வாய்ப்பில் போர்ச்சுகலின் குரேஸ்மா கோலடிக்க, அந்த அணி 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜெர்மனி-இத்தாலி இன்று மோதல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது காலிறுதியில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியும், இத்தாலியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் போர்டியாக்ஸ் நகரில் நடைபெறுகிறது.

காயத்திலிருந்து மீண்டுள்ள ஜெர்மனி கேப்டன் ஸ்வெய்ன்ஸ்டீகர், இந்தத் தொடரில் முதல்முறையாக களமிறங்கவுள்ளார். அதேநேரத்தில் இத்தாலி கேப்டன் டேனிலே டி ரோஸிக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. இத்தாலி அணியின் முன்னணி வீரரான தியாகோ மோட்டா ரெட் கார்டு பெற்றதால், அவர் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது. இது இத்தாலி அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இத்தாலியுடன் இதற்கு முன்னர் விளையாடிய 8 ஆட்டங்களிலும் ஜெர்மனி தோற்றுள்ளது.

ஜெர்மனிக்கு எதிராக இத்தாலியின் வெற்றி தொடருமா அல்லது கடந்த காலங்களில் இத்தாலியிடம் கண்ட தோல்விக்கு ஜெர்மனி பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments
Loading...